politics

img

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடிஅரசு... சிபிஎம் கடும் எதிர்ப்பு... பிரதமருக்கு யெச்சூரி கடிதம்....

புதுதில்லி:
பாலஸ்தீனப் பிரச்சனை மற்றும் அனைத்து மக்களின் மனித உரிமைகள் மீதான தீர்மானத்தின் மீது இந்தியா பங்கேற்காது தவிர்த்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ள மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்  எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில்,பாலஸ்தீனப் பிரச்சனை மற்றும் அனைத்து மக்களின் மனித உரிமைகள் மீதான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது இந்தியா அதில் கலந்து கொள்ளாது தவிர்த்திருப்பதற்கு என் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்திய மக்கள்  பாலஸ்தீனர்களின் உரிமைக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அதுவும் இருந்து வந்தது. பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு என்பது நாட்டில் அனைத்து மக்களின்  கருத்தொற்றுமை மூலமாகவே உருப்பெற்றிருந்தது. இப்போது  ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் வாக்களிக்காததன் மூலம் இந்தியா  இத்தகைய கருத்தொற்றுமையை மீறியிருக்கிறது.

இதுவரையிலும் இந்தியா, இஸ்ரேலின் அப்பட்டமான அத்துமீறல்களையும், பாலஸ்தீனத்தின் நிலங்களில் அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் அனைத்து ஐ.நா.தீர்மானங்களிலும் எதிர்த்தே வந்திருக்கிறது. ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஐ.நா. பாதுகாப்புக்  கவுன்சிலில் 2021 மே 17 அன்று உரையாற்றும்போது பாலஸ்தீன த்தின்  “நியாயமான கோரிக்கைக்கு” (‘Just Palestinian Cause”) இந்தியாவின் ஆதரவைவெளிப்படுத்தி இருந்தார். சமமான இறையாண்மை உரிமைகளுடன் கூடிய இரு நாடுகள் என்பதும், பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் இருந்திட வேண்டும் என்பதும்தான் தீர்வு என்கிற இந்தியாவின் நிலையை அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் பத்து நாட்களுக்குப்பின் வாக்கெடுப்பு வந்த சமயத்தில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து, இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தியாவின் இந்தச் செயலானது சர்வதேச அளவில்  ஏமாற்றத்தையும், திகைப்பையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாலஸ்தீனர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்துமக்களுக்கும் மனித உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் முக்கியமான வேலைகளை ஒழித்துக்கட்டும் செயல் என்று இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததை பலர் சரியான முறையிலேயே பார்க்கிறார்கள்.

நாட்டின் கருத்தொற்றுமைக்கு துரோகம் செய்யாதீர்கள்
இந்தியாவின் இத்தகு தலைகீழ் மாற்றம் இந்தியாவிலும் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதும், ஜனநாயக உரிமைகளை உயர்த்திப்பிடிப்பதும், குடிமை உரிமைகளை உயர்த்திப்பிடிப்பதும் மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் ஐ.நா. மன்றத்திலும் இந்தியாவிற்கு இத்தகைய தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே நான்சுட்டிக்காட்டத் தள்ளப்பட்டிருக்கிறேன்.  இந்தியாவில் மனித உரிமைகள் உயர்த்திப் பிடிப்பதன் மீதான தரம் வீழ்ந்துகொண்டிருப்பதாக உலகம்கருதுவதுடன் இவ்வாறு இந்தியா வாக்கெடு ப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்திருப்பதும் ஒத்துப்போகிறது.இந்தியா, பாலஸ்தீனம் தொடர்பாக இதுநாள்வரையிலும் தெரிவித்துவந்த ஆதரவை மீண்டும் வலியுறுத்திட வேண்டும். பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு ஆதரவு  அளித்து வந்த  நாட்டின் கருத்தொற்றுமைக்கு துரோகம் செய்திடக் கூடாது.  

தாங்கள் இதில் உடனடியாகக் கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து நடைபெறும் புலன்விசாரணை தொடர்பாக தீர்மானம் நிறைவேறிய பின்னர், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் அமைத்திடும் சுயேச்சையான ஆணையத்தின் விசாரணையுடன் ஒத்துப்போகக்கூடிய விதத்தில் உறுதியான நிலையினை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.(ந.நி.)

;