politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

பிரதமர் அலுவலக முதன்மை  ஆலோசகர் ராஜினாமா!

பிரதமர் அலுவலகமுதன்மை ஆலோசகராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா சென்ற 2019 மக்களவை தேர்தல் முடிந்த உடன் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான பி.கே. சின்ஹா புதிய முதன்மை ஆலோசகர் ஆனார். ஆனால், தற்போது அவரும் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் கூறினாலும், பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.

                           ************

‘நோட்டா’ அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்து..? 

நோட்டாவுக்கு (NOTA) அதிகமான வாக்குகள் பதிவானால், அந்தத் தொகுதியில் தேர்தல் முடிவை ரத்து செய்து,  மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக-வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அஸ்வினி உபாத்யாயாவின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

                           ************

2000 ரூபாய் நோட்டு அச்சிடப்படுவது நிறுத்தம்!

2000 ரூபாய் நோட்டு இப்போதும் அச்சிடப்படுகிறதா? என்று  மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில், “2016-17 நிதியாண்டில் 354.39 கோடி  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இது, 2017-18 நிதியாண்டில் 11.15 கோடி நோட்டுக்கள் என்றும், 2018-19 நிதியாண்டில் 4.66 கோடி நோட்டுக்கள் என்றும் குறைந்தது. அதன்பிறகு 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து, சுமார் 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவே இல்லை” என்று தெரிவித்துள்ளது.

                           ************

வரிக்குறைப்பு மாநிலங்கள் கையில்தான் உள்ளதாம்...

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் பதில் அளித்துள்ளார். அதில், “மத்திய அரசு பெட்ரோல் - டீசல்மீதான வரியை குறைப்பது பற்றி பரிசீலிக்க தயாராக உள்ளது. அதேபோல மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து முன் வரவேண்டும். இருதரப்பும் இணைந்து செயல்பட்டால் தான் மக்கள் உரிய பலனைபெறமுடியும்” என்று தப்பித்துள்ளார்.

                           ************

வங்கத்தில் பாஜக தலைவர்கள் 79 பேருக்கு விஐபி பாதுகாப்பு

மேற்குவங்கத்தில் 79 பாஜக தலைவர்களுக்கு மத்திய அரசு விஐபி பாதுகாப்பு வழங்கியுள்ளது. பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு ‘ஒய்பிளஸ்’ பாதுகாப்பு, நடிகர் பாயல் சர்க்காருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு, பாஜக தலைவர்கள் ஜிதேந்தர் திவாரி, கிரேன்மே சட்டபாத்யாயா, யாஷ் தாஸ் குப்தா, சரவந்தி சட்டர்ஜி ஆகியோருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு, கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா, திரிணாமுல் கட்சியிலிருந்து வந்த பன்சாரி மைத்தி, திபாலி பிஸ்வாஸ், பைசாலி டால்மியா ஆகியோருக்கு மத்திய போலீஸ் படை பாதுகாப்பு அளித்துள்ளது.

;