politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உண்மை நிலவரத்தை மறைத்துவிட்டு நாள் ஒன்றுக்கு 45லட்சத்திற்கும்அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. ஆனால் எத்தனை வேறுபட்ட புள்ளிவிபரங்களைக் கொடுத்தாலும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது மிகக் மிக குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.  

ஜூலை 21ஆம் தேதி வரை கிடைக்கப்பெற்றுள்ள விபரங்களின்படி சீனா 138 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. இந்தியா வெறும் 37.73 கோடி டோஸ்களே செலுத்தியிருக்கிறது. அமெரிக்கா 33.41 கோடி டோஸ்களும் பிரேசில் 11.44 கோடி டோஸ்களும் செலுத்தியுள்ளன. 

ஆனால் இன்னும் நுட்பமாக ஆய்வு செய்யும்போது, இந்தியாவில் முழுமையாக இரண்டு டோஸ்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 5.5சதவீதம்பேர்தான். ஒரு டோஸ் மட்டும் செலுத்தப்பட்டவர்கள் வெறும் 22சதவீதம்பேர்தான். ஆனால் பிரேசிலில் முழுமையாக இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் 40சதவீதம் பேர்; ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் 14 சதவீதம் பேர். அமெரிக்காவில் அதிகபட்சமாக இரண்டுடோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 48சதவீதம் பேர்; ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் 56 சதவீதம் பேர். இதுவே பிரிட்டனைப் பொறுத்தவரை இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் 51 சதவீதம்; ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் 67சதவீதம். 

பிரிட்டனின் மக்கள் தொகையை விட அதிகமான மக்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் தடுப்பூசி செலுத்தி வருகிறோம் என்று மோடி அரசு கூறி வருவதில் உண்மை இல்லை என்பதை இந்தப் புள்ளி விபரம் எடுத்துரைக்கிறது.
தற்சமயம் நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்டு வரும் 45லட்சம் தடுப்பூசி என்பதை உடனடியாக இரண்டு மடங்காக்க வேண்டும்; ஆனாலும் அந்த வேகம் போதாது; இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி டோஸ்கள் செலுத்தவேண்டியது அவசியமாகும். இந்த இலக்கை எட்டுவதற்கு  மோடி அரசுஉடனடியாக தடுப்பூசிகளை மிக அதிகமாக கொள்முதல் செய்யவேண்டும்; தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மிக வேகமாக முடுக்கிவிட வேண்டும். 

                                  ****************

வேகமாக அதிகரிக்கும் வேலையின்மை; கூர்மையாக வீழ்ச்சியடையும் கூலி... இதுதான் நாம் காண்கிற இந்தியாவின் உண்மை முகம்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள விபரங்களின்படி, கிராமப்புறங்களில் 7.5சதவீதம் அளவிற்கு மக்களின் கூலி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் இது 23.1சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஏன் நிகழ்ந்தது என்பது மிக முக்கியமானது.கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் இந்தக் காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு மிகப்பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. 2019 ஏப்ரல்-ஜுன் காலகட்டத்திலிருந்து 2020 ஏப்ரல்- ஜுன் காலகட்டம் வரையிலான ஆய்வுகளின்படி இந்திய கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பு மேற்கொண்டிருப்பவர்கள் வேலை செய்வது ஒரு வாரத்திற்கு 12.4 மணி நேரம் குறைந்திருக்கிறது. அந்த அளவிற்குத்தான் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. நிறுவனங்களில், அலுவலகங்களில் முறையான கூலி மற்றும் வாராந்திர, மாதாந்திர சம்பளத்திற்கு வேலைசெய்யும் தொழிலாளர்களின் வேலைநேரம் வாரத்திற்கு 48 மணிநேரம் என்பதிலிருந்து 20.6 மணி நேரமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தொழிலாளர்கள் 27.4மணி நேரம் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாமல் இருக்கிறார்கள். முறைசாரா தொழிலாளர்களின் கதி மிகக்கடுமையானதாக மாறியிருக்கிறது.

இதுவே நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கிறது. சுயவேலைகளில் ஈடுபட்டவர்கள் வாரம் முழுவதும் வேலை இல்லாமல்தவித்திருக்கிறார்கள். நிறுவனங்களில், அலுவலகங்களில் பணியாற்று பவர்கள் வாரம் ஒன்றுக்கு 39.7 மணி நேரம் வேலையை இழந்திருக்கிறார்கள்.இதுதான் உண்மை இந்தியாவின் துயர நிலை. இந்த நிலையை உணர்வதற்குமோடி அரசு இன்னும் மறுத்துக் கொண்டிருக்கின்றது. இதை உணர மறுப்பதே கிரிமினல்தனமான ஒன்றாகும். உடனடியாக அவர்களுக்கு நேரடி பணப்பட்டுவாடா செய்திட வேண்டும். தேவையான அனைவருக்கும் இலவசஉணவு தானியங்களும் முழுமையான நிவாரணமும் அளிக்கப்படவேண்டும். 

                                  ****************

அசாம், மிசோரம்- இரண்டுமே பாஜக ஆளும் மாநிலங்கள் - இரண்டு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் ஒருவருக்கொருவர் மோதி 6 பேரின் உயிரைப் பறித்துள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இப்போதும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சொல்கிறார், “மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு பேணப்படுகிறது; எனவே தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டியதில்லை” என்று. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

;