politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உலகம் முழுவதிலும் கோவிட் 19 மூன்றாவது அலை பரவ துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு வார காலமாக புதிய தொற்று பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த பரவல் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. குறிப்பாக பி1.617 எனப்படும் கோவிட் டெல்டா வகை வைரஸ் கடந்த ஆண்டு இந்தியாவில்தான் கண்டறியப்பட்டது. இது தற்போது வேகமாக பரவுகிறது எனகண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய முறையில்இதன் பரவல் ஜூலை 6 நிலவரத்தின் படி 4லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி கணிசமாக போடப்பட்ட நாடுகளில் இதன் பாதிப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்பதும் உறுதிசெய்யப்பட்டது. எனவே இதுதொடர்பாக தொடர்ந்து வெளியாகிவரும் விபரங்கள், இந்தியாவில் மீண்டும் ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பை முன்னறிவிக்கின்றன. அதை எதிர்கொள்வதில் இந்தியா இன்னும் இயலாத நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. எனவே மூன்றாவது அலை துவங்குவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவது அவசியம். இதை உறுதிசெய்யும் விதத்தில் உலகில் எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தடுப்பூசிகளை மோடி அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

                                    *****************

பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் ஒரு முறை உயர்த்தப்பட்டுள்ளது. 66 நாட்களில் 37வது விலை உயர்வு இது. இதே காலத்தில் கடந்த மூன்று நாட்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 5.5சதவீதத்திற்கும் அதிகமாக கணிசமான அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக இந்தியாவில் கடந்த மே 4 முதல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10.16; டீசல் விலை லிட்டர் ஒன்று ரூ.8.89 அதிகரிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரிகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.

                                    *****************

மோடி அரசு அமைச்சரவையில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது.புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவம் அளித்துவிட்டதாக மோடியின் துதிபாடிகள் படாடோபமாக புகழ்பாடி வருகிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டு ஆகிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அப்படியிருக்கையில் ஏன் இந்த மசோதாவை இப்போது வரை நிறைவேற்ற முடியவில்லை பிரதமர் மோடி அவர்களே?

                                    *****************

ஒன்றிய அரசின் புதிய கூட்டுறவுத்துறை அமைச்சர் என்று அமித்ஷாவை அறிவித்திருக்கிறார்கள். கூட்டுறவுத்துறை என்பதும் கூட்டுறவு சங்கங்கள் என்பவையும் முழுக்க முழுக்க மாநில அரசின் அலுவலே ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணை இதை உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக, கூட்டாட்சி அமைப்பின் மீது மற்றுமொரு தாக்குதலாக ஒன்றிய அரசு புதிதாக கூட்டுறவுத்துறையைஉருவாக்கி அதற்கு அமித்ஷாவை  அமைச்சராக நியமித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனது கூட்டுக் களவாணிகளுக்காக சூறையாடிய ஒன்றிய அரசு, இப்போது நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளையும் அதில் குவிந்துள்ள எளிய மக்களின் சேமிப்பு பணத்தையும் குறி வைத்திருக்கிறது என்பதை நேற்றைய தினம் சுட்டிக்காட்டியிருந்தோம். அதை உறுதி செய்யும் விதமாகவே அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இது மோடி அரசின் மிக சமீபத்திய சீர்குலைவு நிகழ்ச்சி நிரல். மேலும் அதீதக் கொள்ளை நடக்கப் போகிறது. 

;