politics

img

அசாம் மாநிலத் தேர்தலில் விழுந்த முதல் அடி.... பாஜக கூட்டணியிலிருந்து விலகியது போடோலாந்து மக்கள் முன்னணி...

திஸ்பூர்:
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு, மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், முதற்கட்ட தேர்தலுக்கான, வேட்புமனு தாக்கல் மார்ச் 2 அன்று துவங்கவுள்ள நிலையில், போடோலாந்து மக்கள் முன்னணி (Bodoland People’s Front - BPF) திடீரென பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.அத்துடன், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சில மாநில கட்சிகளைக் கொண்ட ‘மஹாஜத்’ கூட்டணியிலும் அக்கட்சி இணைந்துஉள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போடோலாந்து மக்கள் முன்னணி போட்டியிட்டது. அதில் போடோலாந்து மக்கள் முன்னணி 12 தொகுதிகளில் வென்று,மூன்று அமைச்சர்களுடன் ஆட்சியிலும் பங்கு பெற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் பாஜக-வுக்கும் போடோலாந்து மக்கள் முன்னணிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்த போடோலாந்து டெரிடோரியல் கவுன்சிலின் 6-ஆவது ஷெட்யூல் கவுன்சில் தேர்தலில் தனித்தே அக்கட்சி போட்டியிட்டது. 

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனு துவங்கவுள்ள நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “அசாம் மாநிலத்தில் அமைதி – வளர்ச்சி – ஒற்றுமை ஆகிய மூன்றும் அவசியம் என கருதுகிறோம். எனவே காங்கிரஸ் கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், 2016 தேர்தலின்போது பாஜக கூட்டணி ஆட்சி அமைவதற்கு சூத்திரதாரியாக இருந்த ஹக்ரமா மொஹிலாரி, தற்போது நான் அவர்களின் (பாஜக) பக்கத்தில் இல்லாதபோது அவர்களால் எவ்வாறு வெற்றி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியிருப்பதுடன், “அசாமை விட்டு பாஜகவெளியேறுவதை நாம் கண்ணால் காணப்போவது உறுதி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, போடோ மக்கள் முன்னணி தங்கள் அணியில் இணைந்தது குறித்து பேட்டி அளித்துள்ள அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன்போரா, “அசாமில் இதுவரை இருந்த அரசியல் நிலைமை இப்போது மாறி விட்டது. அசாமின் தலைவிதி சிறப்பானதாக மாறப்போகிறது. எங்கள் அணியில் பல கட்சிகள் சேர்ந்துள்ளன. ஒரு ஆற்றில் பல சிற்றாறுகள் இணைந்து அந்த ஆற்றை பெரியஆறாக மாற்றுவது போல காங்கிரசை வலுவாக மாற்றி உள்ளன. எனவே, அசாமில் இந்தமுறை பாஜக-வால் ஆட்சிக்கு வர முடியாது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

;