politics

img

ஜேப்படி செய்யும் மோடிக்கு உதவியாளர் இபிஎஸ்.... தக்கலை பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் பேச்சு....

நாகர்கோவில்:
மத்தியில் உள்ள மோடி அரசு ஜேப்படிக்காரர் என்றால்  ஜேப்படிக்கு உதவியாளர்தான் தமிழகத்தின் எடப்பாடி அரசு. மக்களின் ஒற்றுமையின் மூலமாகத்தான் நாம் இவர்களை தோற்கடிக்க முடியும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த சிபிஎம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் மேலும் பேசிய தாவது:

 நாட்டின் ஜனநாயகமும் அரசியலமைப்பு சட்டமும் கார்ப்பரேட்களாலும், கார்ப்பரேட் ஆதரவு மத்திய அரசாலும் சூறையாடப்பட்டுள்ள மோசமான அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக ஜனநாயகத்தை சீர்குலைத்து எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் விலைக்கு வாங்ககருப்புப் பணத்தையும், கார்ப்பரேட்களிட மிருந்து பெற்ற பணத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மோடியிடமும், அமித்ஷாவிடமும் சவால் விட்டு கேட்கிறோம், நீங்கள் செலவழிக்கும் பணம் அனைத்தும் எங்கிருந்து, யாரால்தரப்படுகிறது என தமிழக மக்களிடம், இந்திய மக்களிடம் சொல்ல முடியுமா?அவர்களால் முடியாது. அவர்கள் ஒரு கையில் கார்ப்பரேட் கைகளிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு மறுகையில் இந்திய இயற்கை வளங்களை, செல்வங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா கால ஊரடங்கின் போது 14 கோடிபுலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ் விழந்து, வருமானமிழந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கால்நடையாக நடந்து பட்ட துயரத்தைஇந்த தேசம் கண்டது. இந்த உலகத்தில் உள்ளஒட்டுமொத்த நாடுகளில் உள்ள மக்களும் முதலாளித்துவ அமைப்பின் கொடூர முகத்தை இந்தகொரோனா காலத்தின்  போது உணர்ந்திருப்பார்கள்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்கொண்ட முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் சுகாதாரத் துறை தனியார்மயமாக்கப் பட்டதால்  கொரோனா காலத்தில் மக்களுக்கு போதிய மருத்துவம் கிடைக்காமல் அதிகளவில் மக்கள் இறந்து போனதை நாம் கண்டோம். ஆனால் அதே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சீனா, வியட்நாம், கியூபா உள்ளிட்ட சோசலிசநாடுகளில் மக்களின் நலன்தான் முதன்மையாக கருதப்பட்டது. சோசலிச நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது. மக்களுக்கு இலவச சுகாதார பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் சோசலிச நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று முறியடிக்கப்பட்டது. இதுதான் சோசலிச அமைப்புக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் உள்ள வித்தியாசம். இந்தியாவில் மத்திய மோடி அரசால் கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாமல் உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மோசமான நாடுகளில் மூன்றாவது இடத்தில்உள்ளது. 

வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக... 
இன்று கிராமப்புற பெண்களுக்கு வருமானம் அளிக்கும் திட்டமாக, மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் இருந்தது. ஆனால் மோடிஅரசு கடந்த பட்ஜெட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான 34.5  சதவீத நிதியை வெட்டிக்குறைத்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஓய்வூதியர்களுக்கு, விதவைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பைசா நிதி கூட உயர்த்தப்படவில்லை. இந்த அரசு வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கவேண்டும், வேலை வழங்காவிட்டால் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் மத்திய பாஜக அரசு பெருமளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டது. இந்த நாட்டு மக்களின் சொத்தான பொதுத்துறைகளை கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும் பணியைதான் இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்திருக்கிறார். 

கோடிக்கணக்கான டன் தானியங்கள் அரசு கிடங்குகளில் புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் அந்த தானியங்களை பசியால் வாடும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கத் தயாராக இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் அரசு விதிக்கும் அதிகளவிலான வரிகள். இந்த வரிவிதிப்பின் மூலம் மக்கள் பணம் ரூ.3 லட்சம் கோடியை கொள்ளையடித்து அவர்கள் தங்கள் கருவூலத்தில் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் சட்டைப் பையில் இருந்து பணத்தை பறித்து அவர்கள் தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்கள். ஆகவே தான் இந்த அரசைஜேப்படி அரசு என சொல்கிறோம். மத்திய மோடிஅரசு ஜேப்படிக்காரர் என்றால்  ஜேப்படிக்கு உதவுகின்ற உதவியாளர்தான் தமிழக இபிஎஸ்  அரசு. மக்களின் ஒற்றுமையின் மூலமாகத்தான் நாம் இவர்களை தோற்கடிக்க முடியும். 

கொள்கை மாற்றம் மிக முக்கியம்
ஆர்எஸ்எஸ் - பாஜக  மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க, மக்களை பிளவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சவாலை முறியடிக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மக்கள் ஒற்றுமைக்கான இந்த போராட்டத்தில் இடதுசாரிகள் முக்கிய பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் நாம் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, முதலமைச்சரின் முகம் மட்டும் மாறினால் போதாது. கட்டாயம் ஆட்சி மாற்றம் வரவேண்டும். முதலமைச்சரின் முகம்மாறவேண்டும். ஆனால் அரசின் கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்பது மிகமுக்கியம். தனியார்மயத்துக்கு எதிரான, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான, தமிழக அதிமுக அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான, மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும் அரசுதான் நமக்கு தேவை.

இவ்வாறு அவர் பேசினார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாதவன், வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்மின் ஆகியோர்பேசினர்.

படக்குறிப்பு : தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் உரையாற்றினார். மேடையில் உ.வாசுகி, எஸ்.நூர்முகமது, ஆர்.செல்லசுவாமி, ஆர்.லீமாறோஸ், ஏ.வி.பெல்லார்மின் உள்ளிட்ட தலைவர்கள்.

;