politics

img

திண்டுக்கல் பூட்டைவிட பெரிய பூட்டு ....

மக்கள் நலனைப் புறக்கணித்து பாஜகவினருக்கு சாதகமாக செயல்படும் அரசாக அதிமுக அரசு மாறிவிட்டது. மே 2-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். 

நிவர் புயலால் ஏற்பட்ட கன மழை காரணமாக பயிர்கள் முழுமையாக அழிந்து நாசமானது. உரிய நிவாரணம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியது. ஆனால், 20 சதவிகிதம் கூட நிவாரணம் வழங்கப்படவில்லை.

கஜா புயலில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களைப் பார்க்க பிரதமர் மோடி வந்தாரா? கோவைக்கு வந்து ஜக்கியின் நிகழ்ச்சியில் நடனமாடியவர்தான் இப்போது மக்களைப் பார்த்து நாடகமாடுகிறார். தில்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பக்கத்து மாநிலமான கேரள அரசு வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக அரசோ மோடி அரசுக்குப் பயந்து வாயில் திண்டுக்கல் பூட்டை விட பெரிய பூட்டு போட்டுக் கொண்டுள்ளது. மாநில உரிமை, மொழி உரிமை, மக்கள் உரிமைகளுக்கு எத்தகைய பாதிப்பு வந்தாலும் இந்தப் பூட்டை அவர்கள் திறப்பதே இல்லை.
நிலவுக்குச் செல்வதாக மோடி கூறுகிறார். மக்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் சாலை ஓரங்களில் நடந்து செல்கின்றனர். 

பெட்ரோல், டீசல் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்து வருகிறது. பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.52-க்கு விற்கப்படுகிறது. இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் இந்தியாவைவிட குறைவாக உள்ளது. அந்த நாடுகளிலும் கச்சா எண்ணெய் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. மூன்றில் இடண்டு மடங்கு வரியை மத்திய அரசுதான் போடுகிறது. பெட்ரோல், டீசல் வரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை. தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் சராசரியாக 42 நாட்கள்தான் வேலை கொடுக்கப்படுகிறது. சட்டப்படியாக கூலி ரூ.256-க்குப் பதிலாக சராசரியாக ரூ.191 தான் கொடுக்கப்படுகிறது. அதையும் பல இடங்களில் உடனுக்குடன் கொடுப்பதில்லை. 

பட்ஜெட்டில் பெரு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரிக்கொடுத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதியோர் உதவித் தொகையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
சாதாரண மக்கள் மீது தொடர்ந்து வரியைப் போட்டு ஜேப்படி திருட்டை நடத்துகின்றனர். மத்தியில் உள்ள திருடர்களுக்கு இங்குள்ள அதிமுகவினர் நண்பர்களாக உள்ளனர். திருடனையும் நண்பனையும் வரும் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும். இவர்கள் நீடிப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. இந்த அரசை மாற்றுகின்ற வலிமை நமக்கு உள்ளது.

தில்லியில் இருந்து வெறுப்பின் தூதுவர்களாக பாஜகவினர் வந்து கொண்டிருக்கின்றனர். மதத்தால், சாதியால் நம்மை பிளவுபடுத்தப் பார்க்கின்றனர். அதற்கு இரையாகாமல் ஒற்றுமையோடு இருந்து இந்த அரசை தோற்கடிக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தின் மீது எந்த ஒரு தாக்குதலையும் அவர்களால் நடத்த முடியாது என்பதை தேர்தல் மூலம் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

கந்தர்வகோட்டை, திருவெறும்பூர் பொதுக்கூட்டங்களில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் ஆற்றிய உரையிலிருந்து...
 

;