politics

img

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.... பாஜகவிற்கு பலத்த தோல்வி.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு அறிக்கை....

புதுதில்லி:
நடைபெற்றுமுடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக-விற்கு பலத்த தோல்வி ஏற்பட்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மகத்தான முறையில் வெற்றிபெற்றிருப்பதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. கேரள மக்கள் மீண்டும் ஒருமுறை இடது ஜனநாயக முன்னணி மீது நம்பிக்கையைத் தெரிவித்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு கடந்த நாற்பதாண்டுகளுக்குப்பிறகு ஆட்சியிலிருந்தவர்களே மறுபடியும் இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இடது ஜனநாயக முன்னணியின் செயல்பாடுகள் சென்ற சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது.கேரள மக்கள், ஆட்சியிலிருந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும், சமீபத்தில் நடைபெற்ற தேசியப் பேரிடர் காலங்களிலும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராகவும், அது பின்பற்றிவந்த மாற்றுக் கொள்கைகளுக்கும், அதன் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும், கேரள சமூகத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக நல்லிணக்கக் குணாம்சத்தைக் காப்பாற்றுவதற்காக அது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் இத்தகு வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

மேற்குவங்கம்
மேற்குவங்கத்தில் பாஜக தன் பண பலத்தையும், தில்லுமுல்லுகளையும் பிரயோகித்தபோதிலும் அங்கே அது கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. வங்க மக்கள் தெள்ளத்தெளிவாக மதவெறி சித்தாந்தத்தை நிராகரித்திருக்கிறார்கள். 
ஐக்கிய முன்னணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மக்கள் பாஜகவைத் தோற்கடிக்க வலியுறுத்தப்பட்டபோது, அது ஐக்கிய முன்னணியையும் நசுக்கியிருக்கிறது. தேவையான படிப்பினைகளைப் பெறுவதற்காக கட்சியால் ஒரு சுய விமர்சன ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு
திமுக தலைமையிலான முன்னணி மனதை ஈர்க்கக்கூடிய விதத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை நிராகரித்தும், ஆட்சியிலிருந்த அஇஅதிமுக அரசாங்கத்தைத் தோல்வியுறச் செய்துமிருக்கிறார்கள்.

அஸ்ஸாம்
அஸ்ஸாமில் பாஜக தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அங்கே மகாஜோட் எனும் மெகா கூட்டணி நல்லதொரு போட்டியை அளித்தது.

புதுச்சேரி
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிகிறது.ஒட்டுமொத்தத்தில், இந்த முடிவுகள் பாஜகவிற்கு பலத்த பின்னடைவாகும். மதவெறித் தீயை விசிறிவிட அது கடுமையாக முயற்சித்த போதிலும், பணபலத்தை மிகப்பெரிய அளவில் அது வாரி இறைத்த போதிலும், தேர்தல் அமைப்புமுறையில் பலவிதங்களில் தில்லுமுல்லுகள் செய்துள்ள போதிலும், மக்களின் ஆதரவினைப் பெற அது தோல்வியடைந்துவிட்டது.
இந்த முடிவுகள், நாட்டில் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாப்பதற்காகவும், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவும் நடைபெற்றுவரும் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் மேலும் வலுப்படுத்திடும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)

;