politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உத்தரப்பிரதேசத்திலும், அதன் தலைநகர் லக்னோவிலும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பும், சுகாதார நெருக்கடியும் கட்டுப்பாட்டை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த மாநில பாஜக அரசின் சொந்த அமைச்சரான பிரஜேஸ் பதக் அதிர்ச்சிகரமான முறையில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். உத்தரப்பிரதேச சட்டத்துறை அமைச்சரான அவர், ஒவ்வொரு நாளும் லக்னோவில் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் குவியும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒருபுறம் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. மறுபுறம் நோயாளிகள் குவிகிறார்கள். சுமார் 24 கோடி மக்கள் தொகை  கொண்ட  உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 0.5 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.  பாஜக அரசின் அமைச்சரே உண்மையை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்களின் உயிரை பாதுகாக்க ஆளும் பாஜக அரசு என்ன செய்யப் போகிறது? எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது? எப்போது மக்களின்
உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறது?

                                      ***************

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் குஜராத்திலும் நிலைமை மோசமாக இருக்கிறது. பிரதமரின் சொந்த மாநிலம் இது. 1998 ஆம் ஆண்டு முதல் பாஜகதான் அங்கு ஆட்சி நடத்தி வருகிறது. பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் இந்த அரசாங்கத்தின் மனிதத்தன்மையற்ற முகம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. சுகாதார வசதி என்ன செய்யப்பட்டிருக்கிறது என்ற விபரத்தை வெளியிடுவதற்கு கூட அந்த அரசு மறுக்கிறது. உதாரணத்திற்கு  சூரத் அரசு மருத்துவமனையில் இளநிலை மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வக நுட்பனர்கள், மருத்துவ ஆய்வக உதவியாளர்கள் உட்பட துணை மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 244 பேர் இருக்க வேண்டும். ஆனால் இதில் 188 இடங்கள் இப்போதும் காலியிடங்களாக உள்ளன. மொத்தம் 742 செவிலியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 122 இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. இந்த மருத்துவமனைதான் இந்தியாவின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான சூரத்தில் கோவிட் 19 சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமல்ல, குஜராத்திலிருந்து மனதை ரணமாக்கும் தகவல்களும், புகைப்படக் காட்சிகளும் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சூரத் மாநகரில், தங்களது நேசத்திற்குரியவர்களின் உடல்களை மக்கள் பொது வெளியிலேயே எரிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்த மாநிலத்து மக்களும் இப்படிப்பட்ட துயரத்திற்கு உள்ளாக கூடாது. குஜராத் மக்களின் இந்த அவலநிலைக்கு பாஜக மாநில அரசே முழு பொறுப்பு. 

                                      ***************

102 ஆண்டுகளாகியும் ஜாலியன் வாலாபாக் நினைவிடம் இன்னும் நமதுஉணர்வலைகளை ஈர்க்கும் வரலாறாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் தியாகிகள் இந்தியாவின் ஒற்றுமையின் சின்னமாக வழிகாட்டுகிறார்கள். இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என ஒற்றுமையின் மகத்தான சின்னம் ஜாலியன் வாலாபாக். நாம் வாழும் நிகழ்காலத்திற்கு மிகவும் பொருத்தமிக்க செய்தியை நமக்கு அளித்துக்  கொண்டிருக்கிறது ஜாலியன்வாலாபாக்.

;