politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தபொழுது “V”  வடிவத்திலானபொருளாதார மீட்சி துவங்கிவிட்டது என அறிவித்தார். நாம் அப்போதேசொன்னோம்; மீட்சி ஏதாவது இருக்கும் என்றால் அது V வடிவத்தில் அல்ல; K வடிவத்தில்தான் அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறும் வகையில்தான் மீட்சி இருக்கும் என கூறினோம். நாம் சொன்னது உண்மை என்பதை CMIE ஆய்வு நிரூபித்துள்ளது. 

அரசு கூறியதற்கு மாறாக, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் உற்பத்தி துறைகளில் வேலைவாய்ப்பு மைனஸ் 11.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சேவை துறைகளில் மைனஸ் 5.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கட்டுமானத் துறையில் முன்னேற்றம் இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் வேலைவாய்ப்புகள் மைனஸ் 0.1 சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றன் விளைவாக, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் வேலையின்மை விகிதம் இளம் வயதினரிடையே மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை 6.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. 30 வயது முதல் 40 வயதுஇளைஞர்களிடையே 5 சதவீதம் அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதுஎன, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கண்டறிந்துள்ளது. மறுபுறத்தில் ஏழை, நடுத்தர மக்களின் நுகர்வும், சொத்து வாங்குதலும் வீழ்ந்திருக்கிறது. 2020 ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கு குறைவான வருவாய் ஈட்டும் மக்கள் பிரிவினரின் வருமானம் 2020 செப்டம்பர் மாதவாக்கில் மிகக்கடுமையாக வீழ்ச்சியடைந்து 30 புள்ளிகள் என்றிருந்தது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மெல்ல மாறியது போல தெரிந்தாலும் 42 புள்ளிகள் என்ற அளவிலேயே கடந்த 6 மாதங்களாக நிற்கிறது. இந்த எளிய மக்களின் வாழ்க்கைநிலை சிறு அளவு கூட முன்னேறவில்லை. மாறாக, ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் செல்வந்தர்கள் 2020 ஜூன் மாதத்தில் வளர்ச்சி குறியீட்டில் 42 என்ற இடத்திலிருந்து, மோடி அரசின் அடுத்த சலுகைகளால் ஆகஸ்ட் மாதத்தில் 50 புள்ளிகளாக, அக்டோபரில் 55 புள்ளிகளாக, டிசம்பரில் 60 புள்ளிகளாக என தொடர்ந்து செல்வத்தை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இது, மோடி அரசு கூறுவது போல ஒட்டுமொத்த நாட்டிற்கும் V வடிவத்திலான முன்னேற்றம் அல்ல, மாறாக, ஏழைகளுக்கு வீழ்ச்சி; பணக்காரர்களுக்கு வளர்ச்சி என்ற K வடிவத்திலானதுதான் என்று பொருளாதார கண்காணிப்பு மையம் உறுதி
செய்திருக்கிறது.

                                              ********************

நமது அரசியல் சட்டத்தை பாதுகாப்போர், குறிப்பாக இளைய சமூகத்துக்குஎதிராக, மோடி அரசாங்கம் தேசத்துரோக பிரிவை தவறாக பயன்படுத்துவதை மற்றுமோர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அவர்கள்கண்டனம் செய்துள்ளார். ஆள் தூக்கி சட்டங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக இது மிக வன்மையான கண்டனம் ஆகும்.

                                              ********************

இந்தியாதான் உலகிலேயே அசுர வேகத்தில் வளரும் பொருளாதாரம் என பிரதமர் மோடியும் நிதியமைச்சரும் திரும்பத் திரும்ப சலிப்பூட்டும் வகையில் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால் நமது பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு கூறுவதை பாருங்கள்:“5 ஆண்டுகளுக்கு முன்புவரை வேகமாக வளர்கின்ற பொருளாதாரமாக இந்தியா முன்னணியில் இருந்தது. ஆனால் இன்று 193 தேசங்கள் கொண்ட பட்டியலில் இந்தியா 164 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.”

                                              ********************

பிரதமர் மோடியும் நிதி அமைச்சரும் பொய் பிரச்சாரத்திலும் வாய்ப்பந்தல் போடுவதிலும்தான்  ஈடுபட்டு வருகின்றனர்.“உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் உள்ள நமது நாடு இப்பொழுது வேகத்துடன் விளையாடும் மனநிலையில் உள்ளது. வெறும் 8 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பலநூறு நடவடிக்கைகள் ஈடிணையற்றது” என்று புளகாங்கிதப்பட்டுள்ளார் பிரதமர் மோடி.“தவறான திசைவழியில் செல்லும் பொழுது வேகம் என்பது அர்த்தமற்றது”என்றார் காந்திஜி! ஆம். நம் நாட்டின் உத்வேகம் மிக்க இளைஞர்களை அழிக்கும் இந்த அரசின் வேகம் ஈடிணையற்றதுதான்! நம் அரசியல் சாசனத்தைசீர்குலைப்பது/மனித உரிமைகளை காலில் போட்டு மிதிப்பது/பொதுச்சுதந்திரத்தை அழிப்பது/மாற்றுக் கருத்து முன்வைப்பவர்களை துரோகிகளாகமுத்திரை குத்துவது/வெறுப்பையும் மதக் கலவரங்களையும் பரப்புவது போன்ற மக்கள் விரோத செயல்களிலும் மோடி அரசாங்கம் வேகம்தான்! இதைமக்கள் ஒன்றுபட்டு வீழ்த்துவார்கள்!

;