politics

img

விளையாட்டுக் காட்டும் எடப்பாடி அரசு....

விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதும் .அடையாளம் காணப்பட்ட திறமைகளை மாநில, தேசிய மற்றும் சர்வதேச  நிலைக்கு உயர்த்துவதும் தமிழக அரசின் குறிக்கோள்கள் என எடப்பாடியார் அரசு வழக்கம் போல வாய்ப்பந்தல் போடுகிறது.  இதன் யோக்கியதையை பற்றி  தெரிந்துகொள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகளுக்கு சென்று பார்த்தாலே தெரியவரும். 

பொருத்தமான விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளம். அப்படியே மைதானங்கள் இருந்தாலும்  தேவையான விளையாட்டுப் பொருட்கள்-கருவிகள் இருக்காது. இவைகள் இரண்டுமிருந்தால் ஆசிரியர் இருக்கமாட்டார். உதாரணத்துக்கு  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள   சவளக்காரன் கிராமத்தின் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியை எடுத்துக்கொள்ளலாம்.  இப்பள்ளியின் ஏழை, எளிய பட்டியலின  மாணவிகள்  2015இல் கால்பந்து போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம், 2016 இல் தேசிய அளவில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர் மாநிலங்களில் பங்கேற்பு,  2017இல் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம், 2018 இல்  தேசிய அளவில்  கோவாவில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் தங்கப்பதக்கம், அதே ஆண்டு  மாநில அளவிலான  போட்டியில் மூன்றாமிடம், 2019-இல் அசாமில்  நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய போட்டியில்  வெள்ளிப் பதக்கம்  என   தேசிய, மாநில அளவில் கால்பந்து போட்டிகளிலும் தடகள போட்டிகளிலும் உள்ளூர் மக்களின் ஆதரவு மற்றும்  பள்ளி நிர்வாகம், விளையாட்டு ஆசிரியரின் முயற்சிகளாலும்  சாதனைகளை தொடர்ந்து புரிந்து வருகிறார்கள்.  ஆனால் இந்தப்  பள்ளிக்கு என்று   ஒரு விளையாட்டு மைதானம்தான்  இல்லை. 

ஒரு காலத்தில்  வயல்கள் நடுவே இருந்தஒரு களத்துமேட்டு திடலை சிறிய விளையாட்டு மைதானமாக்கி  வேறுவழியின்றி இப்பள்ளியின்மாணவர்கள் விளையாடி வருகிறார்கள்.  போட்டிகளுக்குச் செல்லும் முன் முழு அளவிலான பயிற்சிக்கு மன்னார்குடியில் உள்ள பின்லே மேல்நிலைப் பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.  கடந்த 20 ஆண்டுகளாக  ஆதிதிராவிடர் நலத்துறையின்  மாவட்ட நிர்வாகம், வருவாய் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆளுங்பட்சி தலைவர்களிடம் மாலையிட்டு மனுக்கொடுத்தும் குனிந்து பணிந்து  கேட்டுப் பார்த்தும் விளையாட்டு மைதானத்திற்கான எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என சவளக்காரன் இளைஞர் ஒருவர் கூறினார். 

 மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில் 2017வரை  கடந்த பதினைந்து  ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர் பணியிடம்  காலியாகவே இருந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிரப்பப்பட்டுள்ளது.  ஆனால் இக்கல்லூரி மாணவர்கள் பளு தூக்குதல் மற்றும் வலு தூக்குதல்போட்டிகளில் மாநில, தேசிய அளவில் சாதனைகள் செய்துள்ளனர். கடந்த ஆண்டு எம்ஏ இறுதியாண்டு மாணவி கே.திவ்யா 85 கிலோ பிரிவு பளுதூக்கும்  போட்டியில் மாநிலத்தில் முதல் இடமும், 2020 போட்டியில்  பிஎஸ்சி  மூன்றாம் ஆண்டு எம்.தர்மராஜன்,கல்லூரிகளுக்கு இடையிலான  தட்டு எறிதல் போட்டியில் முதல்  இடத்தையும்,  எம்எஸ்சி இறுதியாண்டு மாணவர் பி. பாலகிருஷ்ணன் தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும்,  பிஎஸ்சி 3 ஆம்ஆண்டு மாணவர் எஸ்.விமல் கல்லூரிகளுக்கிடையிலான பளுதூக்குதல் போட்டியில் 3ஆம்இடமும்  பெற்றிருக்கின்றனர். இவை மூன்று ஆண்டுகளுக்குள்ளான சாதனைகள்  மட்டுமே. 

மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியின் பளு மற்றும் வலு தூக்குதல் போட்டிகளின் இருபதாண்டு  பெருமைமிகு பாரம்பரியம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இக்கல்லூரிக்கென உடற்பயிற்சி கூடம் இல்லை. விளையாட்டுத் திடலும் களைச் செடிகளும் கோரையும், மண்டிக்கிடக்கிறது. இதற்கான காரணத்தைத்தேடி நாம் மூளையை கசக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அஸ்திவாரமேயின்றி வானில் வாய்ப்பந்தல் போடும் எடப்பாடியார் அரசு விளையாட்டிற்கென போதுமான நிதியை கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை இதுதான் உண்மை. இது மன்னார்குடி வட்டத்தின் ஒரு கிராமம், ஒரு கல்லூரியின் எதார்த்தம். தமிழ்நாடுமுழுவதும் இதை விரித்துப் பார்த்தால்? ஆட்சியிலிருக்கும் வரை அடித்து மூட்டைகட்டுவதும் ரெய்டு வழக்குகள்  சிறைக்கம்பிகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பாதுகாத்துக் கொள்ள, டாடி மோடி, அங்கிள் அமித்ஷா வகையறாவிற்கு வளைந்து நெளிந்து சலாம் போடுவதும்... எடப்பாடியார் கூட்டத்திடம் இன்னும் ஒரு முறை ஆட்சியை தந்தால்?,  நாடும் நாமும் தரிசாகத்தான்  போவோம்.. போதும்டா சாமி.

நீடா சுப்பையா

;