மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிய போது, சீனாவைச் சேர்ந்த நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே தனது சுயசரிதையில் எழுதியுள்ளதாக கூறிப்பிட்டார். இது தொடர்பான வரிகளை அவர் படிக்க முற்பட்டபோது, அவரை தொடர்ந்து பேசவிடாமல் பாஜக எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ராகுல் காந்தியை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். இந்த சூழலில், மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.
ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள், காரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
