politics

img

பாலியல் குற்றவாளியையே திருமணம் செய்து கொள்ளச் சொல்வீர்களா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு...

புதுதில்லி:
பாலியல் வன்புணர்வு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்துள்ளது பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக மாதர் சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா,  பொதுச் செயலாளர் மரியம்தாவ்லே, சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் கீர்த்தி சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மொகித் சுபாஷ் சவான் (எதிர்) மகாராஷ்டிர மாநில அரசு - வழக்கில் மனுதாரர் (குற்றஞ்சாட்டப்பட்டவர்) பாலியல் உணர்வைத் தூண்டி, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சிறுமியைத் திருமணம் செய்துகொள்ளத் தயாரா என்று தலைமை நீதிபதியே கேட்டிருப்பது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மிகவும் அதிர்ச்சிக்கும் கொதிப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.

நாடு முழுதும் பல வழக்குகளில்,நீதிபதிகள், நாட்டிலுள்ள சட்டத்தின்படி செயல்படுவதற்குப் பதிலாக, பாலியல் வன்புணர்வுக் கொடுமையைச் செய்த நபரையே, அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கும் போக்கு இருந்து வருவதைப் பார்த்து வருகிறோம்.இந்தக் குறிப்பிட்ட வழக்கிலும், பாதிப்புக்கு உள்ளான சிறுமி பத்து, பன்னிரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கிறார்.  பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபரும் மேற்படி சிறுமியை தான்  வன்புணர்வு மேற்கொண்டதை வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாது என்றுமிரட்டி, அச்சுறுத்தி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மிரட்டி பத்திரத்தில் எழுதி வாங்கிய குடும்பம்
மேலும் அந்த சிறுமியை கட்டி வைத்தும், ஆசிட் ஊற்றி தீக்காயங்கள் ஏற்படுத்துவேன் என்றும் மிரட்டிவந்ததாகவும் அறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன. பாலியல் வன்வுணர்வில் ஈடுபட்ட கயவனின்மிரட்டல்களுக்குப் பயந்து, பாதிப்புக்கு உள்ளான அந்த சிறுமியும் தற்கொலை செய்துகொள்ள வெளிப்படையாகவே முயற்சித்திருக் கிறார்.இதுதொடர்பாக விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வாயம், மனுதாரரான குற்றஞ்சாட்டப்பட்டவரும், அவருடைய குடும்பத்தாரும் மிக
வும் செல்வாக்கானவர்கள் என்றும்,பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், அவருடைய அன்னையிடமும் 500 ரூபாய்பத்திரம் ஒன்றில், மனுதாரரும் பாதிப்புக்கு உள்ளான சிறுமியும் பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் செயல்களில் ஈடுபட்டனர் என்று எழுதி வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.  

மனுதாரரை பிணையில் விடுவதற்காகத் தங்கள் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட பிணைமனுவின்மீது, அவுரங்காபாத் அமர்வாயம், அந்தக் கயவனின் நடவடிக்கைகள் ‘மிகக் கொடூரமானவை’ என்று கூறி பிணை மனுவை மிகச் சரியாகவே தள்ளுபடி செய்திருக்கிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம், பாலியல் கொடுமையைச் செய்தவனுக்கு முறையான பிணை மனு தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் அளித்திருக்கக்கூடாது.

திருமணத்துக்கு பரிந்துரைப்பது முற்றிலும் தவறு
மேற்படி பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், மேற்படி சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதிமொழி அளித்ததால், சிறுமியின் பெற்றோர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  பாலியல்வன்புணர்வு வழக்குகளில், பாலியல் வன்புணர்வுக் குற்றத்தைச் செய்த நபரையே திருமணம் செய்துகொள்ள பரிந்துரைப்பது முற்றிலும் தவறு என்று நாங்கள் கருதுகிறோம். பாலியல் வன்புணர்வுக் குற்றத்தை எந்தசமயத்திலும் மன்னித்திட முடியாது, அல்லது திருமணம் செய்துகொள்வதன் மூலம் சட்டப்பூர்வமாக்கிட முடியாது.நம் சமூகத்தில் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள், பாதிப்புக்கு உள்ளான பெண்ணுக்கு அவமானத்தையும், இழிவையும் கொண்டுவந்துவிட்டதாகவும்; அவள், அவ்வாறு வன்புணர்வைச் செய்திட்ட நபரை திருமணம் செய்துகொண்டால் அவள் கவுரவம் காப்பாற்றப்பட்டுவிடும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இத்தகைய சிந்தனை மிகவும் பிற்போக்குத்தனமானதாகும். பாலியல் வன்புணர்வைச் செய்தவனையே அப்பெண்ணுக்குத் திருமணம்செய்து வைப்பது என்பது அப்பெண்ணை மேலும் வன்முறைக்கு ஆளாக்குவதேயாகும்.

திருமணத்துக்குள் வன்முறையை ஏற்க இயலாது
உச்சநீதிமன்றம், மற்றொரு வழக்கில், திருமணம் செய்துகொண்டவர்களுக்கிடையே கூட பாலியல் வன்புணர்வு நடக்குமா என்று கேட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்தக் கூற்றுகுறித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் அதிருப்தி அடைகிறது.  மணமானவர்கள் மத்தியில் நடைபெறும் பாலியல் வன்புணர்வையும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 376ஆவது பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அங்கீகரித்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் பல்வேறு மாதர் அமைப்புகளும் கோரி வருகின்றன.எந்தச் சமூகத்திலும் பாலியல் மற்றும் இதர வன்முறைகளை திருமணத்திற்குள் ஏற்க முடியாது. இதனை நம் சட்டமும் ஒரு பகுதிஅங்கீகரித்து, 1983இல் இந்தியத் தண்டனைச் சட்டம் 498ஏ என்றுஒரு பிரிவையும் மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்திலும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.   இந்தியக் குற்றவியல் நீதிபரி பாலன அமைப்பு முறையில் சிலர்மத்தியில் நிலவும் படுபிற்போக்குத்தனமான, ஆணாதிக்க மனோ பாவங்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு பெண்பளை மதிக்கும் உணர்வு கட்டாயமாக இருந்திட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

                                                               ******************

‘உங்கள் வார்த்தைகள் யாருக்கு உதவும்?’ பிருந்தா காரத் கேள்வி

இப்பிரச்சனை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தங்கள் முன் வந்துள்ள இரு வழக்குகளில் தாங்கள் மன்றமறியத் தெரிவித்த கருத்துக்கள் குறித்து இதனை எழுதுகிறேன்.இது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியவனைப் பிணையில் விடுவது தொடர்பாக தங்கள் முன் வந்த மேல்முறையீட்டின் மீது தாங்கள் கூறிய கருத்தாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிய நீங்கள் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வழக்குரைஞரிடம், குற்றஞ்சாட்டப்பட்ட நபர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டிருக்கிறீர்கள்.குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கைது செய்வதிலிருந்து நான்கு வார காலத்திற்கு இடைக்காலத் தடை விதித்தும் பின் முறையான பிணை மனு தாக்கல் செய்யவும் உங்கள் அமர்வு அனுமதி அளித்திருக்கிறது.இவ்வாறான கேள்விகள், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைத்தும், சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்குகளில் பிணையில் விடுவது தொடர்பான முடிவுகளில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவைகளாகும். இவற்றை மறுபரி சீலனை செய்ய வேண்டும். இவற்றைத் திரும்பப் பெற வேண்டும். பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு அளித்துள்ள பிணையைத் திரும்பப் பெற வேண்டும்.

அவுரங்காபாத் அமர்வாயத் தீர்ப்பை அமலாக்குக!
வன்புணர்வுக் குற்றவாளியை கீழமைநீதிமன்றம் பிணையில் விடுவித்தது, “மிகக்கொடூரமானது” என்று கூறியுள்ள அவுரங்காபாத் அமர்வாயத்தின் தீர்ப்பினை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு 16 வயதுதான். அவர் வன்புணர்வாள னால் பத்து, பன்னிரண்டு தடவைகளுக்கு மேல் வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அந்தச் சிறுமி கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதுதான் சம்மதத்தைக் காட்டுகிறதா? பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிறுமி  ‘மைனர்’ என்பதால், எந்தவிதத்திலும், அவர் சம்மதத்துடனேயே பாலியல் வன்புணர்வு நடைபெற்றிருந்தாலும்கூட, சட்டத்தின்படி வன்புணர்வுக்குற்றத்திலிருந்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தப்பிக்க முடியாது என்பது தெளிவு.

பாதிப்புக்குள்ளான பெண் குறித்து அக்கறை வேண்டாமா?
  தலைமை நீதிபதி அவர்களே, பாதிப்புக்கு ஆளான பெண்ணின் நிலை என்ன? நீங்கள் எழுப்பிய கேள்விகள் அவரிடம் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும்? அவருடைய துன்ப துயரங்கள் குறித்து எவ்வித அக்கறையும் கிடையாதா? பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்களுடைய சிந்தனைகளும் உணர்வுகளும் யாராலோ எங்கிருந்தோ இயக்கப்படக்கூடிய எந்திரங்கள் (ரோபோக்கள்) அல்ல.பாலியல் வன்புணர்வுக் குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தின் நடைமுறை, பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் நலன்களையும் மனதில் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்த வழக்கில் அதற்கு எதிராக நடந்திருக்கிறது.

ஆண்களின் கொடூரத்தை நியாயப்படுத்துவதா?
இரண்டாவது வழக்கு, மற்றொரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பானது. இவ்வழக்கில் ஒரு நபர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகப் பொய் சத்தியம் செய்து உடலுறவு கொண்டிருக்கிறார்.  சட்டத்தின்கீழ், இதுவும் பாலியல் வன்புணர்வுக் குற்றமேயாகும்.இவ்வழக்கு தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், “உச்சநீதிமன்றம் திங்கள்கிழமையன்று குற்றஞ்சாட்டப்பட்ட நபரைக்கைது செய்வதற்குத் தடைவிதித்திருக்கிறது. “கணவன் எவ்வளவு கொடுமையானவனாக இருந்தபோதிலும்,  இருவர் கணவன்-மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது,  அவர்களுக்கிடையேயான உடலுறவையும் வன்புணர்வு என்று அழைக்கலாமா?” என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது.ஆம், ஐயா இதை வன்புணர்வுக் குற்றம் என்றே அழைத்திட வேண்டும். வன்புணர்வு என்பது திருமண அழைப்பிதழால் தீர்மானிக்கப்படுவதில்லை. உடலுறவுக்கு ஒரு பெண் சம்மதம் தெரிவித்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்ததேயாகும். நீதிமன்றத்தின் கருத்துக்கள், ஆண்களின் கொடூரத்தன்மையை நியாயப்படுத்துகின்றன, பெண்களுக்கு ஊறு விளை விக்கின்றன.பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சம்பந்தமாகவும் அவர்களுடைய உரிமைகள் சம்பந்தமாகவும் நாட்டின் சட்டங்களிலும், மக்கள் மனோபாவங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக பல ஆண்டு காலம் பெண்கள் இயக்கங்களில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டவர்களில் ஒருவர் என்ற முறையில்,  நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் நீதிக்காக நடத்திவந்த போராட்டத்தில் ஒரு பின்னடைவாகவே அமைந்திருப்பதாக நான் நம்புகிறேன்.

தாங்கள் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகளையும் முடிவுகளையும் திரும்பப் பெற வேண்டுமென்பதற்கான ஒரு வேண்டுகோளாக இக்கடிதத்தைத் தாங்கள் பரிசீலித்திட வேண்டும். உயர் அமைப்புகளில் உள்ள நீதிமன்றங்களில் அமர்ந்திருப்பவர்கள் உதிர்த்திடும் வார்த்தைகள் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு உதவிட வேண்டுமே தவிர, மாறாக அது அக்குற்றங்களைச் செய்திட்ட கயவர்களுக்கு உதவிடும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது. அதிலும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிறுமிகளாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவ்வாறு அமைந்துவிடவே கூடாது.இவ்வாறு பிருந்தா காரத் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.) 

;