internet

img

ஜானகி அம்மா போட்டா இருக்கா?

#தோழர்_ஆதாக்காள்.

தேர்தல் பணிகளுக்காக மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை தெற்கு சட்டமன்றம் தொகுதியில் பணியாற்ற பணிக்கப்பட்டேன். தேர்தல் நாளன்று நண்பகல் சுமார் 12 மணியளவில் வைகை ஆற்றின் வடக்கு ஓரமாக உள்ள பூத்துகளை பார்வையிட சென்றேன். இடையில் வந்த பல்வேறு தேர்தல் புகார்களை அதிகாரிகளிடம் பேச மதிச்சியம் சிபிஎம் தேர்தல் அலுவலகம் வந்தடைந்தேன்.

அந்த பகுதி தோழர் வழக்கறிஞர் கார்த்திக் என்னுடன் இருந்தார். அப்போது ஒரு மூதாட்டி மெள்ள வந்தார். வாசப்படியில் ஏறமுடியவில்லை. இரண்டு கைகளையும் படியில் ஊன்றி ஆபீசுக்குள் நோட்டம் விட்டார். எனக்கு இருக்கும் அவசரங்களையும் தாண்டி என்ன பாட்டி என வினவினேன். ஒன்னுமில்லையா...ஜானகி அம்மா போட்டா இருக்கா...னு பார்க்றேன்..என்றார். உங்களுக்கு அவரை தெரியுமா? இந்தா இருக்கு அம்மா படம் என்றேன்.

அம்மாவை தெரியுமா? என்று கேட்ட மாத்திரத்தில் நிமிர்ந்து விட்டார். அது எங்க அம்மாயா..நான் அது மகயையா.. என்றார் சற்று அதிகாரமாக..

நான் சேரை விட்டு கீழிறங்கி அவரை மெதுவாக படிக்கட்டில் உட்கார வைத்தேன். எப்படிம்மா ..நீ..ஜானகி அம்மாவுக்கு மக..என்று கேட்டவுடன்.. அழுதுகொண்டே ..பேச ஆரம்பித்தார்.

எனக்கு எட்டு வயது இருக்குமியா..(இப்ப இவருக்கு வயது 88)நாங்க பறையவீட்டு ஆளுக..எங்க அப்பா நடுகாட்டான். சோழவந்தான் பகுதியில் கம்யூனிஸ்ட். இந்த ஜனங்களுக்கு வீடு வாசல் கிடையாது. எங்க அப்பனுக்கு மூனு ஏக்கர் நிலம் உண்டு. அதை கட்சிக்கு கொடுத்து, அரிசனங்களுக்கு வீடு கட்ட சொன்னாரு..ஆனா..அந்த பக்கமும் இந்த பக்கமும் அய்யர் நெலம். வீடு கட்ட முடியல. அம்மாட்ட சொன்னமியா.. ஜானகி அம்மா வந்துச்சு.. தான் கட்டி இருந்த பச்சை சேலை முந்தானியை கழட்டி சோழவந்தான் ரயில் தண்டவாளத்தில் ரெயிலை மறிச்சுச்சு. நாங்கள் அஞ்சுபேர் தான். நான் சின்ன பிள்ளை. ரயில் நின்றது. போலீஸ் வந்தது. எல்லாரையும் அரஸ்ட் பண்ணியது. என்னை வீட்டுக்கு போ என்றார்கள். அவ என் மகள். என்னோடு தான் இருப்பாள் என அம்மா வாதம் பண்ணியது. அஞ்சு நாள் ஜெயில். அங்கு கேப்பை (கேழ்வரகு ) உருண்டையும் கீரையையும் கொடுத்தாங்க. அம்மா அதை உருட்டி எறிந்தார். போலீஸ் விலகியதும் சொவத்திலெ போய் விழுந்தன. அப்பற தான் நல்ல கஞ்சி கிடைத்தது என்றார் கம்பீரமாக..

எங்க ஜனங்குக்கான குடிநீர் கெணத்தில நரகளை அள்ளி போட்டுடாக.. அம்மா...நாடகம் போட கோயம்புத்தூர் போயிடுச்சு. எங்க அப்பா..அம்மாவுக்கு தகவல் சொல்லி..பெரும் போராட்டம்.

இப்படி ஏராளமாக பேசிக்கொண்டே இருந்தார். நானும் அவரோடு அழுதுகொண்டே இருந்தேன்.

ஏய்யா...இந்த..தீக்கதிர்..ஆபிஸூக்கு வானம் தோண்டியது எங்க அப்பா. எங்க சோழவந்தான் தோழர்கள் தாயா.. நான் அவுகளுக்கு சோழவந்தானில் இருந்து கஞ்சி காளயம் சொமப்பேன் என்று பெருமிதத்தோடு சொன்னார்.

தோழர்கள். சுந்தரம்,லாசர், பொன்னுத்தாய் பெயர்களை வாஞ்சையொடு சொல்கிறார்.

எங்கத்தா..போறாய் என்றேன்..மக வீட்டுக்குயா என்றது. ஆத்தாவுக்கு ஒரு சாயா வாங்கு கார்த்திக் என்றேன். தோழரே இன்று டீக்கடை லீவு என்றார். 

நான் எனது பர்சில் இருந்து நூறு ரூபாய் எடுத்தேன். ஆத்தாடி..எனக்கு காசு கொடுக்கிறீர்களே என மீண்டும் கண்களங்கினார். இது என் காசு இல்லத்தா..இது ஜானகி அம்மா பணம். வாங்கிக்க என்றேன். அப்புறம் தான் வாங்கினார். சாப்பிடுத்தா..நான் வர்றே தாயி என மீண்டும் வணங்கினேன்.

காரை நிறுத்திவிட்டு அந்த சுட்டெரிக்கும் வெயிலில் கார்த்திக் பைக்கில் வைகை ஆற்றின் கரைகளில் .........

பயணப்பட்டேன்..புதிய வேகத்தோடு..

ஆம்.ஒன்றுபட்ட மதுரை மாவட்ட நெடுகிலும் இடதுசாரிகள் தடம் எங்கு பார்த்தாலும் கிடைக்கும்.

-Karumalaiyan;