india

img

ஆந்திராவில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து... உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை....

ஹைதராபாத்:
கொரோனா பெருந்தொற்று சூழலில் பள்ளி பொதுத்தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால்கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம் என்றும் ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதன் எதிரொலியாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. தற்போது வரை தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் பிளஸ்- 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. 6 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளன.இந்நிலையில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில்  நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வு கூறுகையில், பிற மாநிலங்கள் பிளஸ்- 2 தேர்வை ரத்துசெய்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று கேட்பது ஏன்? பெருந்தொற்றுச் சூழல் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என்பதுகுறித்த அறிக்கையை ஆந்திர அரசுதாக்கல் செய்ய வேண்டும். தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால்கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம்’’ என்று எச்சரித்தனர்.இதையடுத்து, 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஆந்திரப் பிரதேச கல்வி அமைச்சர் ஏ.சுரேஷ் கூறுகையில், “உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள் ளது போல் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிவுகளையும் அறிவிக்க சாத்தியமில்லை. அதனால் மாநிலத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

;