india

img

சாதிய - மதவாத பேர்வழிகளை தட்டிக்கேட்ட தலித் இளைஞர் அடித்துக் கொலை.. ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரம்...

ஹனுமன்கர்:
ராஜஸ்தான் மாநிலத்தில், 21 வயதான தலித் இளைஞர், சாதிய- மதவாதக் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்தின் கிக்ரலியா கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாம்னியா. 21 வயதே ஆகும் வினோத் பாம்னியா, சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ‘பீம் ஆர்மி’ அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். அப்பகுதியில் நிலவும் பல்வேறுசாதிய ஒடுக்குமுறை, மத நடவடிக்கைகளை துணிச்சலாக தட்டிக் கேட்டு வந்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம், ஹனுமன்கர் சோனேரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஹனுமான் சாலிசா (அனுமன் மந்திர துண்டறிக்கைகள்) விநியோகிக்கப்படுவது தொடர்பாக முதன்முதலாக வினோத்  பாம்னியா ஆட்சேபம் எழுப்பியுள்ளார். பள்ளிகளில் மத நடவடிக்கை களை அனுமதிப்பது, ‘அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்காக மதவெறியர்களின் மிரட்டலை அவர் எதிர்கொண்டுள்ளார். அதுபற்றி அப்போதே காவல்துறையிலும் வினோத் பாம்னியா புகார் அளித்துள்ளார். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பின்னணியில், மே 24 அன்று பாம்னியாவின் வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் அந்த ஊரின், சாதிய- மதவாத கும்பலைச் சேர்ந்தவர்களால் கிழித்தெறியப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக தலித் மக்கள் திரளவே, போஸ்டர் கிழிப்பில் ஈடுபட்டவர்களின் பெற்றோர்கள் பஞ்சாயத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனால் அப்போதைக்கு பிரச்சனை முடிந்துள்ளது.ஆனால், அதன் மறுநாளே குறிப்பிட்ட சாலை வழியாக செல்லும்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், வினோத் பாம்னியாவையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மே 25 அன்று இரண்டாவதாக ஒரு புகார் மனுவை, ராம்சார் காவல்நிலையத்தில் வினோத் பாம்னியா அளித்துள்ளார். எனினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இதனால் தைரியமடைந்த சாதிய- மதவாதக் கும்பல் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வினோத்பாம்னியாவும், அவரது நண்பர் முகேஷூம் தங்களின் வயல்களுக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்து, ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கி, காயம் ஏற்படுத்தியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த வினோத் பாம்னியா,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போயுள்ளார்.இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிசி பிரிவு 302 மற்றும் எஸ்.சி. -எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின்  கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 பேரைக்கைது செய்துள்ளனர்.

;