india

img

ஸ்டான் சுவாமி, ‘கொலை’தான் செய்யப்பட்டுள்ளார்... ஒன்றிய பாஜக அரசு மீது சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு...

மும்பை:
ஜார்க்கண்ட் பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றி வந்த 84 வயது முதியவர் ஸ்டான் சுவாமி, மும்பை டலோஜா சிறைக் கண்காணிப்பில் சிகிச்சையில் இருந்தபோதே, கடந்த ஜூலை 5-ஆம் தேதி மரணம் அடைந்தார்.

எல்கர் பரிஷத் வழக்கில், ஸ்டான் சுவாமியை கடந்த 2020 அக்டோபர் மாதம் கைது செய்த தேசிய பாதுகாப்பு முகமை (NIA), பார்க்கின்சன் என்ற நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு உணவை உறிஞ்சிக் குடிப்பதற்கான குவளை கூட வழங்காமல் சித்ரவதைக்கு உள்ளாக்கி வந்தது. கடுமையான உடல்நலக் கேளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமீன் வழங்குவது மட்டுமல்லாமல், மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குக் கூட தயாரில்லை. சுவாமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், ஒன்றிய பாஜக அரசின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் தழுவிய அளவில் கண்டனம் எழுந்துள்ளது. ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு! என்று எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டினர். இந்நிலையில், பாஜக-வின் நீண்டகாலத் தோழமைக் கட்சியான சிவசேனாவும், இந்த விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளது. சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

“இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பார்த்துப் பயந்தார். எங்கே, ஜார்ஜ் தனது ஆட்சியைக் கவிழ்த்து விடுவாரோ? என அஞ்சினார். ஜார்ஜ் அப்போது ஒரு இளம் தலைவர். ஸ்டான் சுவாமியைப் போல வயதானவர் இல்லை. ஆனால் இன்றைய அரசு 84 வயதான ஸ்டான் சுவாமி, வரவர ராவ் உள்ளிட்டவர்களைக் கண்டு அஞ்சுகிறது. எல்கார் பரிஷத்தில் நடத்தப்பட்ட வன்முறையை யாரும் இங்கு ஆதரிக்கவில்லை. ஆனால் அரசுக்கு எதிராகப் போராடுவதே தேசத் துரோகம் என்று கூறுவதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடுவதை எப்படி சதி செய்வதாகப் பார்க்க முடியும். இதைத் தேசத்துரோகம் என எப்படிச் சொல்ல முடியும். சிறையில் 84 வயதான ஸ்டான் சுவாமி ‘கொலை’ செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அரசை எதிர்ப்பதற்கும் நாட்டை எதிர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசை எதிர்ப்பதே நாட்டிற்கு எதிரான சதி என ஒருவர் நினைத்தால் அதுதான் சர்வாதிகாரத்தின் தொடக்கம். 84 வயதான மனிதனைப் பார்த்து அஞ்சும் அரசு சர்வாதிகார மனப்போக்கைக் கொண்டது, அவர்கள், ஹிட்லர் மற்றும் முசோலினி போல பலவீனமானவர்கள். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

;