india

img

அர்னாப்புக்கு மட்டும் முன்கூட்டியே தெரிந்துவந்த ராணுவ ரகசியங்கள்.... பாலகோட் தாக்குதல் பற்றி 3 நாட்களுக்கு முன்பே அதிகாரி ஒருவருடன் வாட்ஸ் ஆப்பில் உரையாடல்....

மும்பை:
அநாகரிகமான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் அர்னாப் கோஸ்வாமி. ‘ரிபப்ளிக் டிவி’-யின்முதலாளியான இவர், தீவிர இந்துத்துவா பேர்வழியும் ஆவார்.இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவி-க்கு, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும்- டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரிக்க, லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டு, கடந்தஅக்டோபர் மாதம் கையும் களவுமாக சிக்கினார். 

அதாவது, ‘ரிபப்ளிக் டிவி’ சேனலை அதிகமானவர்கள் பார்க்கும் பட்சத்தில், விளம்பரவருவாய் அதிகரிக்கும் என்பதால், அர்னாப்கோஸ்வாமியே மும்பையிலுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500வரை லஞ்சம் கொடுத்து தனது சேனல்களைமட்டுமே பார்க்க வைத்தது ஆதாரங்களுடன்அம்பலமானது.இதையடுத்து அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்த மும்பை காவல்துறை, தற்போது இவ்வழக்கில் 3 ஆயிரத்து 600 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது.டிஆர்பி மோசடி தொடர்பான பல்வேறு ஆதாரங்களைக் கொண்டிருக்கும் இந்த குற்றப்பத்திரிகையில், இந்திய ராணுவ ரகசியங்கள் முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்து வந்துள்ளது என்றும், குறிப்பாக பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதுகூட 3 நாட்களுக்கு முன்பே அவருக்கு தெரிந்துள்ளது என்றும் மும்பை போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது.2019 பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வீரர்கள்சென்ற வாகனத்தின் மீது, பயங்கரவாதிகள்தாக்குதல் நடத்தினர். இதில், 46 சிஆர்பிஎப்
வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ்இ முகமது அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. அதற்கு பதிலடிகொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்தியதுதான், பாலகோட் தாக்குதல் ஆகும்.

பாலகோட் தாக்குதல், பாதுகாப்புத் துறையின் குறிப்பிட்ட அதிகாரிகளைத் தவிரயாருக்கும் முன்கூட்டியே தெரியாது; முழுக்கமுழுக்க பிரதமர் மோடியின் நேரடி மேற்பார்வையில் பயங்கரவாதிகள் மீதுநடந்த தாக்குதல் அது என்று இப்போதுவரைகூறப்பட்டு வருகிறது. அவ்வாறிருக்கையில், அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் தாக்குதல்பற்றி முன்கூட்டியே எப்படி தெரிந்திருந்தது, இந்திய ராணுவ ரகசியங்களை அர்னாப்பிற்கு கூறியது யார்? என்ற சந்தேகங்களை மும்பை போலீசின் குற்றப்பத்திரிகை எழுப்பியுள்ளது.

டிஆர்பி மதிப்பீட்டு அமைப்பான ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கவுன்சிலின் (Broadcast Audience Research Council - BARC) தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுடன், அர்னாப்கோஸ்வாமி, வாட்ஸ் ஆப்-பில் நடத்திய உரையாடல் பதிவை, தங்களின் குற்றச்சாட்டுக்கான ஆதாரமாக குற்றப்பத்திரிகையில் மும்பை போலீஸ் இணைத்துள்ளது.டிஆர்பி மோசடி தொடர்பான 3600 பக்ககுற்றப்பத்திரிகையில், அர்னாப் கோஸ்வாமி - பார்த்தோ தாஸ்குப்தா ஆகியோர் இடையிலான, வாட்ஸ் ஆப் உரையாடல் அடங்கிய ஆவணங்கள் மட்டும் சுமார்1000 பக்கங்களுக்கு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த வாட்ஸ் ஆப் உரையாடலின் ஒருபகுதியை, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின்தேசிய ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பந்தி(@GauravPandhi) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த வாட்ஸ் ஆப் உரையாடலில், ‘மிகப்பெரிய விஷயம் ஒன்று நடைபெற உள்ளது’என்று அர்னாப் கூற, தாவூத் இப்ராகிம் தொடர்பான விஷயமா? என்று கேட்கிறார் தாஸ்குப்தா. ஆனால், ‘இது பாகிஸ்தான் தொடர்பானது’ என்றும், ‘இந்தமுறை மிகப்பெரிய அளவில் சம்பவம் நடைபெற இருப்பதாகவும்’ அர்னாப் கூறுகிறார். அதுமட்டுமன்றி, ‘நடக்கப் போகும் விஷயம், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அந்த பெரியமனிதருக்கு (பிரதமர் மோடிக்கு) மிகவும் சாதகமாக இருக்கும். இதனால் அவர் தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றியை பெறுவார்’ என்றும் அர்னாப் மகிழ்ச்சி அடைகிறார்.அதனைக் கேட்ட தாஸ்குப்தா, ‘என்ன,பாகிஸ்தான் மீது தாக்குதலா?’ என்று மீண்டும் கேட்க, ‘ஆமாம்.. ஆனால் இது,வழக்கமான தாக்குதலை விட பெரியது’ என்றும் ‘காஷ்மீர் தொடர்பான மிகப்பெரியவிஷயமும் கூட’ என்றும் பதில் அளிக்கிறார் அர்னாப். அத்துடன், இந்திய மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகிறார். இதுதான் அந்த உரையாடல் ஆகும்.

இந்த உரையாடல் நடந்து, 3 நாட்கள் கழித்தே - 2019 பிப்ரவரி 26 அன்று இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும் சுமார் 300 பயங்கரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் அழித்ததாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். இதேபோல காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து குறித்தும் முன்கூட்டியே அர்னாப்பிற்குதெரிந்துள்ளது. இந்த விவகாரங்கள் தற்போது சமூகவலைதளங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
 

;