india

img

கரும்பூஞ்சை நோயால் பெங்களூருவில் பலர் பாதிப்பு....

பெங்களூரு:
பெங்களூருவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிலும், அந்நோயிலிருந்து  குணமடைந்த வர்களிலும் கரும்பூஞ்சை தொற்று பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பூஞ்சை நோயின்  ஒரு வகையான இந்த கரும்பூஞ்சை மிகவும் ஆபத்தானது. இதனால் பெங்களூரு நகரில் 97 பேர் பாதிக்கப்பட்டு நால்வர் உயிரி ழந்துள்ளனர். இந்த தொற்று விளைவிக்கும் பூஞ்சையின் பெயர் ம்யூகோர் மைகோசிஸ்.

பத்திரிகையாளர் சந்திப்பில், கர்நாடக மாநிலத்தின் சுகாதார அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் இந்த தகவலை வெளியிட்டார்.  இந்த தொற்றுக்கு  சிகிச்சை அளிக்க மாநிலத்தில் ஆறு பிராந்திய மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.“கரும்பூஞ்சை தொற்று கோவிட் -19 நோய்க்குப் பின், சில குறிப்பிட்ட வகையான நோயாளிகளைத் தாக்குகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், அதிகபட்சமான ஸ்டீராய்டு மருந்து களை பயன்படுத்துபவர்கள், உறுப்பு
மாற்ற சிகிச்சை பெற்றவர்கள், எதிர்ப்பு சக்தி இல்லாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (எச்ஐவி போன்ற எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள வைரஸ்கள்) ஆகியோர் இந்த தொற்றினால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்” என்று அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்க்கோவையினால் ஏற்படும்தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, பார்வை மங்குதல் ஆகிய அறிகுறிகள் இந்த தொற்றினால் முதலில் ஏற்படும். இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், ஒரு புறம்முகம் வீங்குவது, கண் இமைகளை மூடுவது, கண்களின் உட்புறம் வீங்குவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு பார்வை பறிபோகும் நிலை உரு வாகும். “ஒரு நோயாளியின் கண்ணை பாதிக்கும் முன்பு, இந்த பூஞ்சையானது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் மூக்கில் நுழைகிறது. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளில் உள்ள தண்ணீரால் இந்த பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது,” என்று டாக்டர் சுதாகர் கூறியுள்ளார். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்று சரியாகக் கண்டறி வதற்காக  ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்கான காரணத்தை கண்டறிந்த பிறகு, இது பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
4 பேர் இறந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில், இதுவரை வந்த செய்திகளின்படி பெங்களூருவில் கரும்பூஞ்சையால் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 14 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.  (ந.நி.)

;