india

img

பீமா கொரேகான் போராட்டத்தின் 203-வது ஆண்டு தினம்.....

புனே:
பீமா கொரேகான் போர் 203ஆவது ஆண்டு தினம் புத்தாண்டு தினமான ஜனவரி 1 வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் புனேயின் பெமே கிராமத்தில் உள்ள ஜெயஸ்தம்பத்தின் முன் அனுசரிக்கப்பட்டது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே மாவட்ட நிர்வாகம், இந்துத்துவா செயற்பாட்டாளர் மிலிண்ட் எக்பொடே மற்றும் எல்கார் பரிஷத் அமைப்பாளர்கள், கபிர் கலா மஞ்ச் உறுப்பினர்கள், கொரேகான் பீமா பகுதியில் உள்ள தலித் செயற்பாட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அம்பேத்கர் இயக்கங்களும், மாவட்ட நிர்வாகமும் கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்தே மரியாதைகள் செய்திடுமாறு வலியுறுத்தின. இதனால் நடைபெற்ற விழாவில் புத்த துறவிகள் மட்டும் கலந்துகொண்டனர். சமதா சேனை உறுப்பினர்களும், ராணுவத்தின்கீழ் இயங்கிவந்த மஹர் ரெஜிமெண்ட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும் ராணுவ வாத்தியத்துடன் அணிவகுப்பு மேற்கொண்டனர்.மகாராஷ்டிரா அமைச்சர்கள் அஜித் பவார், அனில் தேஷ்முக், நிதின் ரௌத் ஆகியோர் ஜெயஸ்தம்பம் முன்பு மரியாதைகள் செலுத்தினர்.  அனுமதி பெற்று வந்த பல்வேறு அம்பேத்கர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் மரியாதை செலுத்திச் சென்றனர்.கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று தொடர்வதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனால் மக்கள் யாரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இப்பகுதிக்குள் வர முடியாது.

2017 டிசம்பர் 31 அன்று பீமா  கொரேகான் சௌர்யா தினம் அனுசரிக்கப்பட்ட சமயத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உரையாற்றினர். மறுநாள் 2018 ஜனவரி 1 அன்று 200ஆவது பீமா கொரேகான் போராட்டதினம் அனுசரிக்கப்பட்ட சமயத்தில் வன்முறை ஏற்பட்டு அதில் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். புனே காவல்துறையினர் முந்தையதினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைவர்களில் சிலர் “ஆத்திரமூட்டும்” வகையில் பேசியதால்தான் இவ்வன்முறை நிகழ்ந்தது என்று கூறி நாடு முழுவதும் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.எல்கார் பரிஷத் வழக்கு என்று அழைக்கப்படும் இவ்வழக்கினை விசாரணை செய்துவரும் தேசியப் புலனாய்வு முகமை, இதுவரை எல்கார் பரிஷத் அமைப்பின் தலைவர் சுதிர் தாவ்லே மற்றும் சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வரவர ராவ், ஸ்டான் ஸ்வாமி உட்பட பலரை, அவர்கள் தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக்கூறி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.(ந.நி.)

;