india

img

என் உறுப்புகளை விற்று கடனை எடுத்துக் கொள்ளுங்கள் மோடிக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்த விவசாயி!

போபால், ஜன, 2-
எனது உடல் உறுப்புகளை விற்று நான் செலுத்த வேண்டிய பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் என மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் சதர்பூர் மாவட்டம் பந்தேல்கண்ட் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய விவசாயி முனேந்திர ராஜ்புத். இவர் கிராமத்தில் சிறிய மாவு மில் வைத்திருக்கிறார். வழக்கமாக இந்த மாவு மில்லின் மின்கட்டணம் ரூ3000 முதல் 4000 மட்டுமே வரும். இதனை இவர் தவறாமல் கட்டி விடுவார். ஆனால் கொரோனா தொற்று காலத்தில் திடீரென மொத்தமாக மின் கட்டணம் ரூ 88 ஆயிரம் என வந்திருக்கிறது. இதனால் குழப்பமடைந்த முனேந்திர ராஜ்புத் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திடம் சென்று முறையிட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் வந்த பில்லை முதலில் கட்டுங்கள் என மிரட்டியிருக்கின்றனர். காலஅவகாசம் கேட்டிருக்கிறார். அதையும் தர மறுத்திருக்கின்றனர். 
இதனால் மனமுடைந்த ராஜ்புத் சோகத்துடன் வீடு திரும்பியிருக்கிறார். அடுத்த ஒரு சில நாட்களில் வந்த தனியார் மின் விநியோகிக்கும் நிறுவனத்தினர் மின் கட்டணத்திற்காக ராஜ்புத் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அந்த மாவு மில்லையும் சீலிட்டு அந்த மாவு மில்லையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதனால் மிகவும் மன உலைச்சல் அடைந்த ராஜ்புத் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் எனது உடலை மோடி அரசு எடுத்துக் கொண்டு எனது உடல் உறுப்புகளை விற்று நான் செலுத்த வேண்டிய பாக்கி 88 ஆயிரத்தை மின் நிறுவனத்திற்கு செலுத்தி விடுங்கள். சாதாரண மக்களான நாங்கள் சிறு அளவு பாக்கி வைத்திருந்தாலும் நாங்கள் சமூகத்தின் முன்பு அவமானப்படுத்தப்படுகிறோம். ஆனால் மிகப்பெரிய அரசியல் வாதிகள், கார்ப்பரேட்கள், அரசு அதிகாரிகள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் சாதாரண மக்கள் வாங்கிய கடனிற்காக அவமானப்படுத்தப்படுகிறோம் என எழுதியிருக்கிறார். 
இது மத்திய பிரதேச மாநில மக்களிடையேயும், தில்லியில் போராடும் விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

;