india

img

கொரோனா காலத்தில் தொழிலாளர்களின் வருமானம் 17 சதவீதம் வீழ்ச்சி! 10 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்பு!!

புதுதில்லி, மே 6-

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியபின் கடந்த ஓராண்டில் தொழிலாளர்களின் வருமானத்தில் 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், பத்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளார்கள் என்றும் ஓர்  அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாகப் பல குடும்பத்தினர் உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொண்டும், தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்பதன் மூலமும் கடன் வாங்குவதன் மூலமும் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள நிலையான வேலைவாய்ப்புக்கான மையம், ‘2021இல் உழைக்கும் இந்தியாவின் நிலை: கோவிட்19 இன் ஓராண்டு’ என ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்தான் இவ்வாறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

2020 மார்ச் முதல் 2020 டிசம்பர் வரையிலுமான காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இக்காலத்தில் கோவிட்-19 நாட்டின் வேலைவாய்ப்பிலும், தொழிலாளர்களின் வருமானத்திலும், சமத்துவமின்மையிலும், வறுமையிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆழமான முறையில் ஆய்வு செய்திருக்கிறது.

10 கோடி பேர் வேலைகள் இழந்துள்ளனர்;

2020 ஏப்ரல்-மே மாதங்களில் நாடு தழுவிய அளவில் சமூக முடக்கத்தின் காரணமாக பத்து கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இவர்களில் பலருக்கு 2020 ஜூன் மாதத்தில் மீளவும் வேலை கிடைத்துள்ள போதிலும், சுமார் 1 கோடியே 50 லட்சம் பேர் இன்னமும் வேலையில்லாமல்தான் இருக்கிறார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

குடும்பத்தில் ஈட்டிவந்த வருமானத்தைப் பொறுத்தவரை, 2020 ஜனவரியில் நான்குபேர் உள்ள ஒரு குடும்பத்தினரின் சராசரி தனிநபர் வருமானம் 5,989 ரூபாயாக இருந்தது, 2020 அக்டோபரில் 4,979 ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சமூக முடக்கத்தின் பின்னர் நிரந்தர வேலை பார்த்து வந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அந்த வேலைகளிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு, முறைசாராத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். அதாவது இவர்களில் 30 சதவீதத்தினர் சுய வேலைவாய்ப்பு பெறுபவர்களாகவும், 10 சதவீதத்தினர் கேசுவல் தொழிலாளர்களாகவும், 9 சதவீதத்தினர் முறைசாராத் தொழிலாளர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

இவ்வாறு வேலையிழந்த தொழிலாளர்கள் தங்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் தங்கள் பிழைப்புக்கான வேலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொதுவகை இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இந்துக்களும் அநேகமாக தங்கள் பாரம்பர்யத் தொழில்களைத் தங்களுடைய சுயவேலைவாய்ப்புக்காகத் தேர்ந்தெடுத்துள்ள அதே சமயத்தில், விளிம்புநிலை சாதியைச் சேர்ந்தவர்களும், முஸ்லீம்களும் தினக்கூலிகளாக மாறியிருக்கின்றனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

கல்வி, சுகாதாரம், தகவல்-தொழில்நுட்பம் மற்றும்  பொறியியல் துறைகளில் பணியாற்றி, உயர் வருமானம் ஈட்டி வந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து விவசாயம், கட்டுமானம் மற்றும் சிறு வர்த்தகங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பிலும், வருமானத்திலும் இழப்புகள் ஏற்பட்டதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கு என்பது 5 சதவீதப் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதாவது 2019-20இன் இரண்டாவது காலாண்டில் 32.5 சதவீதமாக இருந்தது, 2020-21இன் இரண்டாவது காலாண்டில் 27 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வருமான இழப்பைப் பொறுத்தவரை, 90 சதவீதம் தாங்கள் ஈட்டிய வருமானத்தில் குறைவு ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், 10 சதவீதம் வேலை இழப்பின் காரணமாகவும் ஏற்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கேரளம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் வேலையிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. மாதாந்திர வருமானத்தில் சராசரியாக 17 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டு வந்தவர்களும், முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்களும் அதிக அளவில் இழப்பினை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பெண்கள் மற்றும் இளம் தொழிலாளர்களாவார்கள். சமூக முடக்கத்திற்குப்பின்னர் உள்ள மாதங்களில் ஆண் தொழிலாளர்களில் 61 சதவீதத்தனர் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளனர். 7 சதவீதத்தினர் வேலைகளை இழந்துள்ளனர். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை 19 சதவீதத்தினர் மட்டுமே மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளனர். 47 சதவீதத்தினர் நிரந்தரமாக வேலைகளை இழந்துள்ளார்கள்.

கொரோனா தொற்றுக் காலத்தில், தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் என்பது நாளொன்றுக்கு 375 ரூபாய் என்று உள்ள தொகையைக்கூட, 23 கோடி பேர்களுக்கும் அதிகமானவர்கள் பெறவில்லை. வறுமை விகிதம் கிராமப்புறங்களில் 15 சதவீத அளவிற்கும், நகர்புறங்களில் சுமார் 20 சதவீத அளவிற்கும்  உயர்ந்திருக்கின்றன. இதனால் குடும்பத்தினர் இந்த வருவாய் இழப்பை, தங்களுடைய உணவுகளைக் குறைத்துக்கொண்டிருப்பதன் மூலமும், தங்கள் சொத்துக்களை விற்பதன் மூலமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும், பண லேவாதேவிக்காரர்களிடமும் கடன்கள் வாங்குவதன் மூலமும் சமாளித்திக் கொண்டிருக்கின்றனர். சமூக முடக்கம் அறிவித்து ஆறு மாதங்களுக்குப்பின்னரும் கூட இவர்களில் 20 சதவீதத்தினர் உணவு உட்கொள்வதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

மத்திய மாநில ஆட்சியாளர்கள் சமூக நலத்திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளாத நிலையில் இந்த நிலைமை சமூகத்தில் மிகவும் ஆழமான அளவில் பிரச்சனைகளை உருவாக்கி இருக்கின்றன. எனவே 2021 இறுதிவரை அனைவருக்குமான பொது விநியோக முறை அமல்படுத்தப்பட்டு, இலவச ரேஷன் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மேலும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்றும், சுமார் 25 லட்சம்  அங்கன்வாடி மற்றும் ‘ஆஷா’ ஊழியர்களுக்கு ‘கோவிட் கால படி’ (Covid hardship allowance) வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

;