india

img

ஆப்கன் பெண்களுக்கு ஆதரவாக நிற்போம் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

புதுதில்லி:
ஏகாதிபத்தியத்தை எதிர்த்திடுவோம், ஆப்கன் பெண்களுக்கு ஆதரவாக நிற்போம்என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானை பல ஆண்டுகளாக தன்னுடைய புவியியல்-அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின்கீழ் இயங்கி வந்தகூட்டணி ஆட்சியால், ஆப்கன் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உறுதிமொழிகளுக்கு மிகப்பெரிய அளவில் துரோகம் இழைக் கப்பட்டிருக்கிறது என்பதை சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன. ஆப்கனிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்பட்டபின், படு பிற்போக்குத் தனமான சமூகச் சிந்தனைகளுடன்கூடிய தலிபான் அரசியல் சக்தி அநேகமாக ஒட்டுமொத்தநாட்டையும் கைப்பற்றியுள்ளது. தலிபான்,இஸ்லாமிய ஆப்கன் அமீரகம் (‘IslamicEmirate of Afghanistan’) என்று ஆப்கானிஸ்தானைப் பிரகடனம் செய்திருக்கிறது. அப்போது பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனாலும் ‘சரியத் சட்ட’த்திற்கு உட்பட்டு அது நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருக்கிறது. இந்த அறிக்கையானது ஆப்கனில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் அமைப்புகளின் மத்தியில் பல்வேறுவிதமான அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலிபான் இயக் கத்தினர் கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராகவும் குறிப்பாக 1990களில் சிறுபான்மை இனத்தினருக்கு எதிராகவும்  மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை நினைவில் வைத்துள்ள சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் மாதர் அமைப்புகளின் மத்தியிலும் அத்தகைய உணர்வே மேலோங்கி இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், வெகு காலமாகவே, ஆசியாவில் ஜனநாயக மற்றும் சமூகஇயக்கங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், இப்பிராந்தியத்தில் செயல்பட்டுவந்த பிற்போக்கு மற்றும் அடிப்படைவாத சக்திகளுக்கு நிதி உதவி, ராணுவஉதவி மற்றும் அரசியல் ஆதரவினை செலுத்திவந்தது. இதன் தொடர்ச்சியாக, 1996-2001க்கிடையே தலிபான் ஆட்சி நடைபெற்ற சமயத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து ஜனநாயக எண்ணம்கொண்ட மக்களும், குறிப்பாக ஆப்கன் பெண்கள், அதனுடைய கொடூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சமயத்திலும் அதற்குப் பின்னரும் சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். அதன்பின்னர் நீண்டகாலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்தப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததன் விளைவாக இந்நாட்டில் ஜனநாயக இயக்கங்களுக்குப் புத்துயிர்ப்புக் கொடுக்க முடியவில்லை. தலிபான் திரும்பி வந்திருப்பது இதற்கு சாட்சியமாகும்.

இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளஅச்ச உணர்வு, கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை நாட்டின் பொருளாதாரத்தை அநேகமாக பாதிக்கும். சாமானிய மக்களின் துன்பதுயரங்களை அதிகரித்திடும். இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஐ.நா. தலைமையில் உள்ள சர்வதேசசமூகம், ஆப்கனில் அமைய இருக்கும்அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன்கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் செயல்படவேண்டுமேயொழிய, ராணுவ ரீதியாக ஆளக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அங்கே அமைதியை நிலைநாட்ட முடியும். பெண்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவரின் கல்வி, வேலை மற்றும் இதர ஜனநாயக வசதிகளுக்கான உரிமைகளைப் பாதுகாத்திட முடியும்.

தற்போது இந்தியாவில் ஆர்எஸ்எஸ்/பாஜக ஆகியவற்றின் படு பிற்போக்குத் தலைமையின் கீழ் உள்ள ஒன்றிய அரசாங்கம், அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், இப்பிராந்தியத்தில் ஏற்கனவே தனிமைப் பட்டுவிட்டது.இன்றைய சூழ்நிலையில் ஓர் உண்மையான மனிதாபிமானக் கவலையுடன் செயல்படுவதற்குப் பதிலாக, இந்திய அரசாங்கம், ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றுவதைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவிலும் தன்னுடைய மதவெறிஅரசியலை மேலும் கூர்மையாக எடுத்துச்செல்வதற்காக, ஆப்கனில் ஜனநாயகத்திற் காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் கவலைப்படுவதுபோல் இஸ்லாமோபோபியாவை (இஸ்லாம் மதத்திற்கு எதிராக நிற்பதுபோல்) காட்டிக்கொண்டிருக்கிறது.

ஆப்கன் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் நீதி கிடைப்பதற்காக நடைபெறும் இயக்கங்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஆதரவினையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவேண்டும் என்றும், ஆப்கன் நிலைமைகளை ஆர்எஸ்எஸ்/பாஜக பயன்படுத்திக்கொண்டு இந்தியாவில் பிளவுவாத அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் அனைத்துக் கிளைகளுக்கும் அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. (ந.நி.)

;