india

img

மக்கள் பட்டினியில் வாடும் போது அரசு  உணவு தான்யங்களை ஏற்றுமதி செய்கிறது - உணவு உரிமை பிரச்சாரக்குழு வேதனை

மக்கள் பஞ்சம்-பட்டினியில் பரிதவித்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அரசாங்கம் உணவு தான்யங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருப்பது, மக்கள் மீதான அதன் அக்கறையின்மையையே தோலுரித்துக்காட்டுகிறது என்று உணவு உரிமை பிரச்சாரக் குழு கூறியிருக்கிறது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவு தான்யங்களை ஆறு மாதங்களுக்கு அனைவருக்குமான பொது விநியோக முறையின் கீழ் அளித்திட வேண்டும் என்று உணவு உரிமை பிரச்சாரக்குழு கோருகிறது. அரசாங்கம் ஏற்றுமதி செய்துள்ள உணவு தான்யங்களை இவ்வாறு உபயோகப்படுத்தியிருந்தால் நாட்டிலுள்ள மக்களுக்கு ஓராண்டு காலத்திற்கு அளித்திருக்க முடியும் என்று அக்குழு கூறுகிறது.

இதுதொடர்பாக திங்கள் அன்று இக்குழுவின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கோவிட்-19 பெருந்தொற்று இப்போது கிராமப்பகுதிகளில் பரவியிருக்கிறது. இத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள சமூக முடக்கம் மக்கள் மத்தியில் குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்கள் மத்தியில் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதுள்ள நிலைமை 2020இல் இருந்ததைவிட மோசமாகும். காரணம் இப்போது ஏராளமானவர்கள் வேலையிழந்திருப்பதுடன், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு  மருத்துவ செலவுகளையும் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் (PMGKAY) ஏற்கனவே ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக உணவு தான்யங்கள் அளிக்கப்படும். ஆனால் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி முறைசாராத் தொழிலாளர்களை அதிகமாகப் பாதித்திருக்கிறது. இவர்களில் பலரிடம் ரேஷன் அட்டைகள் கிடையாது.  

இந்த ஆண்டு ஏராளமாக உணவு தான்யங்களை ஏற்றுமதி செய்திருப்பதிலிருந்து, பட்டினியால் வாடும் மக்கள் குறித்து அரசாங்கம் அக்கறையற்று இருப்பது முழுமையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

2020-21ஆம் ஆண்டில் பாசுமதி அல்லாத அரிசி 13 மில்லியன் டன்களுக்கு அதிகமாகவும், கோதுமை 2 மில்லியன் டன்களுக்கு அதிகமாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.  இதனை பட்டினிகிடக்கும் மக்களுக்கு மாதத்திற்கு 5 கிலோகிராம் உணவு தான்யம் என்ற முறையில் ஓராண்டுக்கு 25 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும். உண்மையில் இவ்வாறு அரிசி கிலோ கிராம் 27 ரூபாய் என்ற விலையில்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இது இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அரிசிக்கு நிர்ணயித்துள்ள விலையான கிலோவிற்கு 37 ரூபாய் என்பதைவிடக் குறைவாகும். இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் கிடங்குகளில் 100 மில்லியன் டன்கள் உணவு தான்யங்கள் இருப்பு இருந்துவருகிறது.

இவற்றிலிருந்து அரசாங்கம் பட்டினி கிடக்கும் மக்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது நன்கு தெரிகிறது. மாறாக அது குறைந்தவிலைக்காவது உணவு தான்யங்களை ஏற்றுமதி செய்வதிலேயே சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறது. அல்லது சென்ற ஆண்டு செய்ததைப்போன்று ‘எதனால் உற்பத்தி’க்காகப் பயன்படுத்துதல் போன்ற இதர நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு உணவு உரிமை பிரச்சாரக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ந,நி

;