india

img

இந்திய கடற்கரைக்கு வந்த பேராபத்து - சுந்தர்ராஜன்

CRZ விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்திய கடற்கரைக்கு வந்த பேராபத்து ஏற்படும் சூழல் உள்ளது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது

உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியின்றி தொடங்கப்படும் திட்டங்களை இழப்பீடு மட்டும் செலுத்தி விட்டு தொடரலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவு.

கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு Coastal Regulatory Zone Notification 2011ன் கீழ் உரிய முன் அனுமதி பெறுவது அவசியமாகும். இதன் மூலம் கடற்கரையை ஒட்டிய மணல்மேடுகள், நதிகள், முகத்துவாரங்கள், கழிமுகங்கள், ஊற்றுகள், அலையாத்திக் காடுகள் போன்றவற்றின் பல்லுயிர்த்தன்மை பாதுகாக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியாவில் உள்ள சட்டங்களில் அதிக முறை மீறப்பட்ட சட்டம் CRZ 2011ஆகத்தான் இருக்கும். பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட பல கடற்கரை இடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் CRZ விதிகளை மீறியே செயல்படுத்தப்படுகிறது.

CRZ Notification 2011 -ன் கீழ் கடற்கரை பகுதிகளில் தொடரப்படும் திட்டங்களுக்கு தொடங்குவதற்கு முன்னரே CRZ அனுமதி பெறுவது அவசியமாகும். திட்டம் தொடங்கிய பின்னர் CRZ அனுமதி கோர முடியாது.

இந்தியாவில் பல்வேறு திட்டங்கள் CRZ அனுமதி இல்லாமல் தொடரப்பட்டு CRZ அனுமதி பெற முடியாமல் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது உரிய அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பிற்கான இழப்பீட்டை செலுத்தி விட்டு திட்டத்திற்கான CRZ அனுமதியை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் கொச்சியில் CRZ விதிகளை மீறி கட்டப்பட்ட மாராடு அடுக்குமாடி குடியிருப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.

CRZ விதிகளை மீறியதால் தண்டையார்பேட்டை மற்றும் திருவொற்றியூரில் செயல்பட்டு வந்த கே.டி.வி. நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு நிலையத்த மூடி, அதன் 18 எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை அகற்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

மேலும் தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு மீன்வளத்துறையால் தொடங்கப்பட்ட மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணிகள், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளிட்ட பல திட்டங்கள் CRZ அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட காரணத்தால் தற்போது வழக்குகளை சந்தித்து பாதியில் நிற்கின்றன.

இந்திய மற்றும் தமிழக கடற்கரை ஏற்கனவே இதுபோன்ற சுற்றுச்சூழல் விதிமீறல்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும், கடல் அரிப்பாலும், கடல் நீர் உட்புகுவதாலும் பேராபத்தை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் விதிமீறல் திட்டங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களையும் தொடர்ந்து ஊக்குவிக்க ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவது கண்டனத்திற்குரியது.

கடலையும், கடற்கரையையும் பாதுகாப்பதன் மூலமே மீனவர்களின் வாழ்வாதரத்தையும் கடல்சார் பல்லுயிரியத்தையும் பாதுகாக்க முடியும். மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த புதிய உத்தரவிற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் விரைவில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து மேற்கொள்ளப்படும்.

;