india

img

மருந்துகள் மற்றும் உணவுப்பொருள்களையும் இலவசமாக வழங்குக - சமூக அறிவியல் கல்வியாளர்கள் அறிக்கை

புதுதில்லி:
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில்,  விளிம்புநிலையில் உள்ள மக்கள்மற்றும் ஏழை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு அனைத்து உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் இலவசமாக வழங்கவேண்டும் என்று சர்வதேச அளவில் இயங்கும் சமூக அறிவியல் மனிதாபிமானசெயல்மேடை (SSHAP-Social Science in Humanitarian Action Platform) என்னும் அமைப்பின் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் இப்போது மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளும், விளிம்புநிலை மக்களும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் இதுவரை 2 கோடிக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  எனவே அவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

கிராமப்புற பாதிப்பு விபரம் வெளிவரவில்லை
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையுடன் இப்போதுஏற்பட்டிருக்கும் இரண்டாவது அலையைஒப்பிடும்போது, இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தலித்துகள் மற்றும் முறைசாராத் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மற்றும் சிறுபான்மை குழுக்களைக்கடுமையாகப் பாதித்திருக்கிறது என்றும்கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள மத்திய தரவர்க்கத்தினர், மேட்டுக்குடியினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்துத்தான் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாகுபாடான நடைமுறையை நிறுத்துக
கிரேட் பிரிட்டனில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் நிறுவனத்தின் பேராசிரியர் லைலா மேத்தாகூறுகையில், “இந்தியாவில் கோவிட்-19முதல் அலை வந்தபோது, சிறுபான்மைமக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக, அது எப்படி அரசியலாக்கப்பட்டது என்றும், அதனை வைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை நசுக்கிடவும், அரசமைப்புச்சட்ட விழுமியங்களை அரித்து வீழ்த்திடவும் நடவடிக்கைகள் எடுத்ததை நாம் பார்த்தோம்.  மனிதர்களிடையே பாகுபாடு காட்டும் இத்தகைய நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டியது அவசியம். அனைவருக்கும் அடிப்படையான அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள், தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

அதேபோன்று மேற்படி இன்ஸ்டிட்யூட்டில் ஆராய்ச்சி மாணவராக உள்ள  டாக்டர் சில்பி வஸ்தவா கூறுகையில்,  “தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் விளிம்புநிலை மக்களுக்கும் இதரர்களுக்கும் இடையேயான சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறது. அரசின் ஆதரவு இல்லையேல் அவர்களின் எதிர்காலம் ஆபத்திற்கு உள்ளாகும்” என்று கூறியுள்ளார்.       (ந.நி.) 

;