india

img

அக். 7 அகில இந்திய எதிர்ப்பு தினம்: நாட்டை விற்கத்துடிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து காக்கவேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை

நாட்டை விற்குத் துடித்துக்கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களிடமிருந்து விலைபோகாது நாட்டைப் பாதுகாக்க வேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமையாகும் என்றும், இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்காக அக்டோபர் 7 அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரித்திட வேண்டும் என்றும்  மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை மற்றும் அனைத்துத் துறைவாரி சங்கங்களின் சம்மேளனங்கள் தொழிலாளர் வர்க்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய நிதி அமைச்சர் ஆகஸ்ட் 23 அன்று ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதன்கீழ் அடுத்த நான்காண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப் போவதாகவும் கூறியிருக்கிறார்.  இவர்களின் திட்டத்தின்படி  அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள சொத்துக்கள் நீண்டுகால அளவில் ஒத்திக்கு விடப்பட இருக்கின்றன. அதாவது நெடுஞ்சாலைகளில் 26,700 கிலோ மீட்டர் தூரத்தை 1.6 லட்சம் கோடி ரூபாய்கும் 400 ரயில் நிலையங்களையும், 150 ரயில்களையும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்கும், 42,300 சர்குட் கிலோமீட்டர் மின் இணைப்பு வழிகளை 67 ஆயிரம் கோடி ரூபாய்கும், 5,000 மெகாவாட் நீர் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சார சொத்துக்களை 32 ஆயிரம் கோடி ரூபாய்கும், 8,000 கிலோ மீட்டர் தேசிய எரிவாயு குழாய்வழிகளை 24 ஆயிரம் கோடி ரூபாய்கும், 4,000 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் குழாய் வழிகளை (pipelines) 22 ஆயிரம் கோடி ரூபாய்கும், பிஎஸ்என்எஸ் மற்றும் எம்டிஎன்எல் கோபுரங்களை  39 ஆயிரம் கோடி ரூபாய்கும், 21 விமான நிலையங்களையும் 31 துறைமுகங்களையும் 34 ஆயிரம் கோடி ரூபாய்கும், 160 நிலக்கரிச் சுரங்கத் திட்டங்களை 32 ஆயிரம் கோடி ரூபாய்கும், இரண்டு விளையாட்டு அரங்கங்களை 11 ஆயிரம் கோடி ரூபாய்கும் பல்வேறு கால அளவிற்கு ஒத்திக்கு அளித்திடத் திட்டமிட்டிருக்கிறது.  இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகைகளை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு முதலீடு செய்யப்படும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் நாட்டின் அனைத்து உள்கட்டமைப்பு சொத்துக்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் இழிவான முயற்சிகளே தவிர வேறல்ல. எனவேதான் மக்களின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பப்பட்ட நாட்டின் சொத்துக்கள் அனைத்தும் இவ்வாறு தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அனைத்துத்தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருமதி நிர்மலா சீத்தாராமன் இவ்வாறு நாட்டின் சொத்துக்கள் தனியாரிடம் ஒத்திக்குத்தான் விடப்படுகிறதேயொழிய அதன் சொந்தக்காரர் அரசாங்கம்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறார். இதனை எவரும் ஏற்றிடவில்லை.

அதேபோன்று கிராமங்களில் உள்ள பொது நிலங்கள், தண்ணீர் தரும் அமைப்புகள், பொதுக் கட்டிடங்கள் போன்றவற்றையும் பணமாக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திட அரசாங்கம் கிராமப் பஞ்சாயத்துக்களுடன் விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் கிராம சமுதாயங்களையும் மிகவும் ஆபத்திற்கு உள்ளாக்கிட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய உடனடி விளைவு என்பது சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்துப் பொருள்களும் கடுமையான முறையில் விலை உயரும் என்பதேயாகும். ஏனெனில், இவ்வாறு ஒத்திக்கு வாங்கும் தனியார் தங்கள் இஷ்டத்திற்கு விலைகளை நிர்ணயித்துக்கொண்டு கொள்ளையடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தனியாரிடம் ஒப்படைப்பதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிற அரசாங்கத்தின் வாதத்திற்கு முற்றிலும் முரணான முறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். இது ஏற்கனவே மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள வேலையின்மையுடன் சேர்ந்து நாட்டில் மிகவும் மோசமான நிலைமையை ஏற்படுத்திடும்.

மேலும் தனியாரிடம் இவை தாரை வார்க்கப்படுவதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியினர் தலித்/பழங்குடியினராவார்கள். ஏனெனில் தனியார்துறையில் இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே வேலையில்லை.

லாபம் ஈட்டும் 100 பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதால், அரசாங்கத்தின் கஜானாவிற்கு வந்துகொண்டிருந்த லாப ஈவுத்தொகைகள் இனி வராது. அவை தனியாரின் பணப்பெட்டிகளையே நிரப்பிடும். இவ்வாறு ஒன்றிய அரசாங்கமானது எவ்விதமான பொருளாதார அறிவும் இன்றி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நடவடிக்கைகளால் மக்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட இருக்கின்றன.

அரசாங்கம் பணக்காரர்களுக்கு வரி விதிக்க மறுக்கிறது. மாறாக இவ்வாறு சாமானிய மக்களின் நலன்களைக் காவுகொடுக்கும் கொள்கையைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மட்டுமே ஆட்சி செய்வதால் இவ்வாறு சாமானிய மக்கள் பாதிக்கப்படுவது குறித்து அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் சாமானிய மக்கள் என்ன செய்திட வேண்டும்?

இதற்கான பாதையை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை, அனைத்துச் சங்கங்களின் சம்மேளனங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி காட்டியிருக்கின்றன. ஆட்சியில் உள்ள கார்ப்பரேட் ஆதரவு, சாமானிய மக்களுக்கு எதிரன கயவர்களைத் தூக்கி எறியுங்கள். நாட்டின் பொருளாதாரத்தையே காவு கொடுக்கும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கயவர்களைத் தூக்கி எறியுங்கள். அதேசமயத்தில் நாடு முழுதும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட எதிர்ப்பை ஏற்படுத்துங்கள்.

இத்தகைய நாசகர தேச விரோதக் கொள்கைகளிலிருந்து நாட்டின் சொத்துக்களைப் பாதுகாத்திடவும், நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும் தொழிலாளர் வர்க்கமாகிய நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

ஆட்சியாளர்களின் மக்கள் விரோத, தேச விரோதக் கிரிமினல் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துச் செல்வோம்.  

 “இந்தியாவைப் பாதுகாப்போம்” (MISSION INDIA) இயக்கத்தின் கீழ் ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து மக்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்திடுவோம்.  

ஒன்றிய ஆட்சியாளர்களின் தேசவிரோத நாசகர நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை கீழ்க்கண்டவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது:

(1)ஒன்றிய ஆட்சியாளர்களின் நாசகரக் கொள்கைகள் எப்படியெல்லாம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன என்று மக்கள் மத்தியில் விரிவாக எடுத்துச்செல்வோம்.

(2)அக்டோபர் 7 அன்று அகில இந்திய அளவில் தேசிய எதிர்ப்பு தினம் அனுசரிப்பது, அன்றையதினம் மாவட்ட அளவுகளில் ஆர்ப்பாட்டங்கள்/பேரணிகள் நடத்துவது.

(3)புதுதில்லியில் தசராவிற்குப்பின் தீபாவளிக்கு முன் புதுதில்லியில்  தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாடு நடத்துவது. அன்றைய தினம் ஆட்சியாளர்களின் நாசகரக்கொள்கைகளுக்கு எதிராக எதிர்கால இயக்கங்களையும், ஒரு குறிப்பிட்ட பொருத்தமான சமயத்தில் வேலைநிறுத்தத்தைத் திட்டமிடுவது.

(4)ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாகும் துறைவாரி சங்கங்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது.

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டுமேடை மற்றும் அனைத்து சங்கங்களின் சம்மேளனங்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

;