india

img

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் பணியினை உடனடியாகத் துவங்கிடுக: பிரதமருக்கு பன்னிரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கடிதம்

புதுதில்லி, மே 13-

நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடுப்படும் பணியினை உடனடியாகத் துவங்கிட வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி நாட்டிலுள்ள பன்னிரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), து. ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), மு.க.ஸ்டாலின் (திமுக), சோனியா காந்தி (காங்கிரஸ் கட்சி), எச்.டி. தேவகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), சரத் பவார் (தேசியவாதக் காங்கிரஸ்), உத்தவ் தாக்கரே (சிவ சேனா), மமதா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சொரேன் (ஜேஎம்எம்), பரூக் அப்துல்லா (ஜம்மு-காஷ்மீர் மக்கள் கூட்டணி), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதிக் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஆகிய தலைவர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

அன்பார்ந்த பிரதமர் அவர்களே, நம் நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மனிதகுலத்தின்மீது பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து நாங்கள் தனித்தனியாகவும், இணைந்தும் பல முறை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, உங்கள் அரசாங்கம் அந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உதாசீனம் செய்திருக்கிறது அல்லது நிராகரித்திருக்கிறது. இதனால்தான் இன்றையதினம் நிலைமைகள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றடைந்திருக்கின்றன.

நாட்டை இந்த அளவிற்குத் துயரார்ந்த நிலைக்குத் தள்ளியுள்ள நிலையில், இப்போதாவது உங்கள் அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு அமல்படுத்திட வேண்டும் என்று நாங்கள் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலக நாடுகளிடமிருந்தும், உள்நாட்டிலுமிருந்தும் சாத்தியமான அனைத்துவழிகளிலும் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்திடுக.  நாடு முழுதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் பணியினை உடனடியாகத் துவங்கிடுக. உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடத்திட கட்டாய உரிமம் வழங்கிடுக. பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கும் 35 ஆயிரம் கோடி ரூபாயை தடுப்பூசிகளுக்காக செலவுசெய்திடுக. சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டும் பணிகளை நிறுத்திடுக. அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையை, ஆக்சிஜன் கொள்முதல் செய்வதற்கும், தடுப்பூசிகள் வாங்குவதற்கும் பயன்படுத்துக. பிஎம்கேர்ஸ் எனப்படும் பிரதமர் தனியார் அறக்கட்டளை சார்பில் வசூலிக்கப்பட்டு, கணக்கில் கொண்டுவராத நிதியத்தில் உள்ள அனைத்துப் பணத்தையும் மேலும் அதிக அளவில் தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள்  வாங்குவதற்காக விடுவித்திடுக.  வேலையற்றிருக்கும் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாதந்தோறும் ஆறாயிரம் ரூபாய் அளித்திடுக. தேவைப்படும் அனைவருக்கும் உணவு தான்யங்களை இலவசமாக வழங்கிடுக. (மத்திய கிடங்குகளில் தற்சமயம் ஒரு கோடி டன்களுக்கும் மேலான உணவு தான்யங்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன). கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நமக்கெல்லாம் உணவு அளித்திடும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களைப் பாதுகாப்பதற்காக வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக. அப்போதுதான் அவர்களால் இந்திய மக்களைப் பேணிப் பாதுகாத்திட உணவு உற்பத்தி செய்வதைத் தொடர்ந்திட முடியும்.  

உங்கள் அலுவலகத்திற்கோ அல்லது உங்கள் அரசாங்கத்திற்கோ பதில்சொல்லும் நடைமுறை கிடையாது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும்கூட, நாட்டின் நலன்கள் மற்றும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அளித்திருக்கும் இப்பரிந்துரைகள் குறித்தாவது பதில்அளிப்பீர்களேயானால் அதனை நாங்கள் பாராட்டுவோம். இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியிருக்கிறார்கள்.

(ந.நி.)

;