india

தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் ஏற்படுத்தியுள்ள திருத்தங்களை ரத்து செய் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, மே 28-

மத்திய அரசு, சமீபத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டவிதிகளில் கொண்டுவந்துள்ள திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசாங்கம் சமீபத்தில் முகநூல், ட்விட்டர் போன்றவற்றின் பாதுகாப்பான ஷரத்துக்கள் தொடர்பாக  நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறது. 2021 பிப்ரவரி 25 தேதியிட்ட மேற்படி அறிவிக்கையானது இன்று (மே 28) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, தகவல் சேவைகளை அளித்திடும் சமூக ஊடகங்கள் அனைத்தும் தகவலை அனுப்பிடும்  முதல் நபர் (first originator), குறித்து நீதிமன்றத்தாலோ அல்லது அரசாங்கத்தாலோ கோரப்பட்டால் தகவலை அளித்திட வேண்டும்.

அரசின் இந்த அறிவிக்கையானது தகவல் பரிமாற்றம் தொடர்பாக தற்போது இருந்துவரும் ஒழுங்கமைப்பில் (protocol) இருந்துவரும் பாதுகாப்பு அம்சங்களை சிதைக்கிறது என்றே அர்த்தமாகும் என்று முகநூல்/வாட்சப் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இதனை இதுதொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்களும் சரி என்றே கூறுகிறார்கள். தற்போது இருந்துவரும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளைப் பலவீனப்படுத்துவது இவற்றைப்பயன்படுத்திடுவோரின் அந்தரங்கத்தை (privacy) மீறுவதாகும், மேலும் இது பல்வேறு கிரிமினல் நோக்கங்களுக்கு இட்டுச்செல்வதற்கான ஆபத்தையும் அதிகரித்திடும்.

முகநூல், இப்போது அரசாங்கத்தின் அறிவிக்கைகளுக்கு இணங்க பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்தியாவில் முகநூல் வாட்சப் தரவுகளைப் பெற விரும்புகிற அதே சமயத்தில், அது ஐரோப்பிய யூனியனில் அது கேட்டுக்கொண்டுள்ளபடி மாற்றங்களைச் செய்திருக்கிறது.

மத்திய அரசாங்கம், தில்லிக் காவல்துறையைப் பயன்படுத்தி, ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டியிருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் பாஜக தலைவர்கள் பலரின் ட்விட்டர் பதிவுகள் திரிக்கப்பட்டவை என்று கூறியதற்காகவே அதனை மிரட்டும் விதத்தில் இவ்வாறு அது நடவடிக்கை எடுத்திருக்கிறது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை பாஜக அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவதையும், ட்விட்டர் அலுவலகங்களில் காவல்துறை சோதனைகள் மேற்கொண்டதையும் அப்பட்டமான மிரட்டல் நடவடிக்கைகள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

தற்போதுள்ள பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை அரித்துவீழ்த்திவிட்டு செய்திகள் பதிவு செய்திடும் நபர்கள் குறித்து அரசாங்கத்திற்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று கோருவது ஓர் ஆபத்தான மற்றும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். இவை குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறி அரசு அவர்களைக் கடுமையாகக் கண்காணித்திடும் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திடும் செயலாகும். இந்த ஷரத்துக்கள் அனைத்தையும் ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

;