india

img

எல்லா வழக்குகளிலும் கைது நடவடிக்கை கட்டாயமில்லை - உச்சநீதிமன்றம் 

குற்றப் பத்திரிகை தாக்கலின் போது, ஒருவரைக் கைது செய்தே தீர வேண்டும் என்பது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்த வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைது நடவடிக்கை ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டால், அது சம்பந்தப்பட்ட மனிதரின் கௌரவத்துக்கும் தன்மானத்துக்கும் இழுக்காகி விடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குற்றவியல் தண்டனைச் சட்டம் 170வது பிரிவில், காவல் என்ற சொல் உள்ளதே தவிர அது நீதிமன்றம் அல்லது போலீஸ் காவலைக் குறிக்கவில்லை. சட்டம் கைது செய்வதை அனுமதிப்பதால் அரசு அந்த அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தி ஒருவரின் சுதந்திரத்தை நசுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொடிய குற்றங்களுக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கும் வழக்குகளிலும் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும்  இந்த வழக்கில் முன்ஜாமின் தொடர்பான, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

;