india

img

அனைத்து சிறைகளிலும் நெரிசல்களை குறைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுதில்லி, மே 9-

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் நிலை தொடர்வதாலும், நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் நாலு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு சிறைகள் அனைத்தும் நிரம்பிவழிவதாலும், மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள 14 பக்கங்கள் கொண்ட அந்த உத்தரவில், சிறையில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்குப் பல்வேறு உத்தரவுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வாயம், காவல்துறையினர் அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், சிறைகளில் அதிக நெரிசல் ஏற்படுவதைத் தவிர்த்திட, கைது செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

எந்திரரீதியாக சிறைப்படுத்தாதீர்:

குற்றவியல் சட்டங்களின்கீழ் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவாக சிறைப்படுத்தப்படக்கூடிய குற்றங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவோரை எந்திரரீதியாக கைதுசெய்து, சிறையில் அடைக்காதீர்கள் என்று அத்தீர்ப்பில் குறிப்பிட்டு வலியுறுத்தப் பட்டிருக்கிறது.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்புக் குழுக்கள் அல்லது அதிகாரம்படைத்த உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறைவாசிகள் குறித்து பரிசீலனை செய்து அவர்களை இடைக்கால பிணையில் விடுவித்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.   

மேலும், 2020இல் கொரோனா தொற்றுப் பரவிய காலத்தில்,  இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், இப்போது மீண்டும் “உடனடியாக” விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  இவ்வாறு சென்ற ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் மீளவும் சிறைக்குத் திரும்பிவிட்டார்கள். அதேபோன்று 2020இல் பரோலில் விடுவிக்கப்பட்டவர்களும் மீண்டும் 90 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் சிறையில் உள்ள நெரிசலைத் தவிர்த்திட வேண்டும் என்றும் இவற்றின்மூலம் கொரோனா தொற்றுப் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், சிறைகளின் சுவர்களுக்குள்ளும் வாழும் உயிர்களைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சில சிறைகளில் அவற்றின் கொள்திறனுக்கும் அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மற்றும் அவர்களைக் கண்காணித்துவரும் சிறைக்காவலர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த சிறைகளில் நெரிசலைக் குறைக்கவேண்டியது அவசியமாகும்,”  என்று நீதிபதிகள் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள்.

“மரணத்தை ஏற்படுத்தும் கொரோனா தொற்றை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சிறைகளின் சுவர்களுக்குள்ளும் இதற்கெதிராக வலுவாக நடவடிக்கைகளை எடுப்பது தேவையாகும்,” என்றும், “அதற்கு காவல்துறையினர் கைது செய்யப்படுவதையும் வரையறுத்துக்கொள்ள வேண்டும்,” என்றும் நீதிபதிகள் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்கள்.

 

உச்சநீதிமன்ற உயர்மட்டக்குழுவும் பரிந்துரை:

முன்னதாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும் இதேபோன்று கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருப்பதைத் தடுப்பதற்காக, சிறைகளில் நெரிசலைக் குறைத்திட, விசாரணைக் கைதிகள்/தண்டனைக் கைதிகள் பிணையில் அல்லது விடுப்பில் (பரோலில்) விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.

தில்லிச் சிறைகளில் அதிகபட்சம் 10,026 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது 19,679 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறைத் தலைவர், உச்சநீதிமன்றம் அமைத்திட்ட உயர்மட்டக் குழுவிற்குத் தெரிவித்திருக்கிறார்.

நீதியரசர் விபின் சங்வி தலைமையிலான உயர்மட்டக்குழு, சிறையிலிருப்பவர்களின் எண்ணிக்கையானது, சிறை நிர்வாகத்தைக் கடினமாக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவதையும் மிகவும் சிரமமாக்கி இருக்கிறது என்றும், சிறைவாசிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது தடுத்திட, தனிநபர் இடைவெளி மிகவும் அவசியத் தேவையாகும் என்றும் கூறியிருக்கிறது.

“ஒருசில வாரங்களிலேயே இரண்டாவது அலை ஒவ்வொருவரையும் மூச்சுவிட சிரமத்திற்கு உள்ளாக்கப்போகிறது. ஒவ்வொருவரும் மூச்சு விடுவதற்காகக் கடுமையாகப் போராட இருக்கிறார்கள். மனிதகுலம் எதிர்கொள்ளக்கூடிய மிக மோசமான அனுபவமாக இது இருக்கப் போகிறது,” என்றும் உயர்மட்டக்குழு கூறியிருக்கிறது.

அரசமைப்புச்சட்டத்தின் 21ஆவது பிரிவின்கீழ் உயிர்வாழும் உரிமை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் மிகவும் மதிப்புமிக்க அடிப்படை உரிமையாகும். இது சிறையில் நிபந்தனையின்றி வாடிக்கொண்டிருக்கும் விசாரணைக் கைதி/தண்டனைக் கைதிகளுக்கும் பொருந்தக் கூடியதேயாகும்,” என்றும் உயர்மட்டக்குழு தெரிவித்திருக்கிறது.

சிறையிலிருப்பவர்களை பிணையில் அல்லது விடுப்பில் விடுவிக்க வேண்டுமென்கிற உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது தில்லி சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருந்திடும் சுமார் நாலாயிரம் பேர் பயனடைவார்கள் என்றும், இது சிறையில் நெரிசலைக் குறைத்திடும் என்றும் சிறைத்துறைத் தலைவர் கூறியிருக்கிறார்.

(ந.நி.)

;