india

img

தோழர் கௌரி அம்மா மரணம் சீத்தாராம் யெச்சூரி இரங்கல்

புதுதில்லி, மே 11-

கேரள கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர், கேரளத்தின் முதல் வருவாய்த்துறை அமைச்சர் தோழர் கௌரியம்மாள் காலமானார். அவருக்கு வயது 102. இச்செய்தி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“தோழர் கே.ஆர். கௌரி அம்மா இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

தோழர் கௌரியம்மா, கேரளாவில் மக்கள் இயக்கத்தின் மகத்தான தலைவராவார். கௌரியம்மா, கேரளாவில் 1957இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, தோழர் இ.எம்.எஸ்-ஆல் தலைமை தாங்கப்பட்ட  முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் வருவாய், கலால் மற்றும் தேவசம் அமைச்சராக இருந்தார். கேரளாவில் நிலச்சீர்திருத்தங்களைச் செய்திட்ட சிற்பிகளில் அவரும் ஒருவராவார்.

இப்போதைய கேரள மாநிலம் அமைவதற்கு முன்பே, தோழர் கௌரியம்மா, திருவாங்கூர் - கொச்சி சட்டமன்ற பேரவைக்கு இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்தில் பல்வேறு அரசாங்கங்களில் அவர் அமைச்சராக இருந்தார். அவர் 1994இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபின்பு, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். எனினும், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகளில் விரக்தியடைந்து, கடந்த சில ஆண்டுகளாக அவர் இடது ஜனநாயக முன்னணியுடன் ஒத்துழைத்து செயல்பட்டு வந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மற்றொரு மாபெரும் தலைவரான டி.வி. தாமஸ் அவர்களை அவர் மணம் முடித்திருந்தார். எனினும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் 1964இல் பிளவு ஏற்பட்ட சமயத்தில் தாமஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இருந்த அதே சமயத்தில் தோழர் கௌரியம்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருடைய இறுதிப் பயணத்தின்மூலம், கேரளம் இஎம்எஸ் அவர்களின 1957 கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் அங்கம் வகித்து உயிருடன் இருந்த கடைசி நபரையும் இழந்துவிட்டது.

கேரளம், அனைத்துத் தரப்பினராலும் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த புகழ்மிக்க புதல்விகளில் ஒருவரை இழந்துவிட்டது.

அவருடைய நினைவுக்கு என் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் கேரள மக்களுடன் என்னையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.  இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

(ந.நி.)

;