india

img

ஆக்சிஜன் வழங்கிடுக இல்லையேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்க! - மத்திய அரசுக்கு, தில்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

புதுதில்லி, மே 5-
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான மருத்துவ ஆக்சிஜன் வழங்கிடுக, இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்க என்று மத்திய அரசுக்கு, தில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தில்லியில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனை அளித்திட வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. அதனை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்கு எதிராகத்தான் உயர்நீதிமன்றம் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்கிறது.

“நீங்கள் வேண்டுமானால் நெருப்புக்கோழி போன்று மண்ணுக்குள் தலையை சொருகிக் கொள்ளலாம், நாங்கள் அப்படி இருந்திட முடியாது,” என்றும் உயர்நீதிமன்றம் அப்போது தெரிவித்தது.

 “நீங்கள் இந்த நகரத்தின் ஓர் அங்கம் இல்லையா? உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா? நீங்கள் என்ன தந்த கோபுரங்களிலா வசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“தில்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இப்போது நாங்களும் கூறுகிறோம். எந்த வழியிலாவது இதனைச் செய்திட வேண்டும். நீதிமன்றத்தின் கட்டளைகளை நிறைவேற்றினீர்கள் என்பதைத் தவிர வேறெதையும் நாங்கள் கேட்கத் தயாராயில்லை,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

(ந.நி.)

;