india

img

மே 26 கருப்பு தினம் அனுசரிக்கப்படும்: அனைத்து விவசாய முன்னணி அறிக்கை

புதுதில்லி, மே 16-

வரும் மே 26 அன்று நாடு முழுதும் கருப்பு தினம் அனுசரிக்குமாறும், அன்றையதினம் மக்கள் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அனைத்து விவசாய முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் இயங்கும் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒரேகுடையின்கீழ் உள்ளடக்கியுள்ள அனைத்து விவசாய முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா), சார்பில் சனிக்கிழமையன்று இணைய வழி பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் உரைநிகழ்த்திய விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், மத்திய அரசின் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தில்லி எல்லைகளில் கிளர்ச்சிப் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைவதையொட்டி, மே 26 அன்று ‘கருப்பு தினம்’ அனுசரித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  அன்றையதினம் மக்கள் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும், கடைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“மே 26, நாங்கள் கிளர்ச்சிப் போராட்டத்தைத் தொடங்கி ஆறு மாதங்களாகின்றன. மேலும் அந்த தினமானது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று ஏழாண்டுகளாகிவிட்டதையும் குறிக்கிறது. இந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக அனுசரிக்க இருக்கிறோம்,” என்று ராஜேவால் கூறினார்.

“மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில் அவருடைய கொடும்பாவிகளையும் எரிக்க இருக்கிறோம்” என்றும் ராஜேவால் கூறினார்.

(ந.நி.)

;