india

img

சந்திரயான்- 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவத்திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

சந்திரயான்-3 விண்கலம் 2022 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டில் விண்ணில் செலுத்தப்படக் கூடும் என ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்தார். அதில், சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்கும் பணி நடைபெற்று வருவதாகக் தெரிவித்துள்ளார். 

மேலும், சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்குவதில், கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்புமுறைகளின் நடைமுறையாக்கும், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்புச் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்திற்கான பணிகள் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்தது.

எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொது முடக்கத்தின் போதும் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இயல்பான பணிகள் இனி மேற்கொள்ளப்படும் என்ற அனுமானத்தில், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. நிலவு குறித்த ஆய்வுகளில் இது குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இதற்கு அடுத்ததாகச் சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவைச் சுற்றி வந்து, ஆய்வு செய்து வருகிறது.

;