india

img

புதுவை அரசின் 144 தடை உத்தரவு


புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்ட அறிக்கை, புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிப்பிடபட்டிருந்தது.
இதன்படி, அமைதிக்கு எதிரான சட்டவிரோத வகையில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல், கம்புகள் மற்றும் பேனர்களை வைத்திருத்தல், கோஷங்களை எழுப்புதல், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மக்கள் அதிகளவில் வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
புதுச்சேரி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தனது அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியது. 
மேலும், இதுகுறித்து புதுச்சேரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதமும் அனுப்பியது. ஆனாலும் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி அரசு தந்திரமாக மேற்கொண்ட இந்த நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தேர்தல் நடக்க ஓரிரு நாட்களே இருப்பதால் இந்த வழக்கை மிக அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஞாயிறன்று(ஏப்.4) தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்று வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாலை 6 மணிக்கு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது, அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 144 தடை உத்தரவு பிறப்பிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “எங்களுக்கும்தான் தூக்கு தண்டனை கொடுக்க அதிகாரம் இருக்கிறது. ஆனாலும், அந்த தண்டனையை எல்லா வழக்குகளிலும் தண்டனையை கொடுக்கிறோமா?
தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி அல்ல. நாம் ஒரு சுதந்திர தேசத்தில் வாழ்கிறோம் என்பதை தேர்தல் ஆணையமும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது?அதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.
மேலும், 48 மணி நேர தடை என்று அறிவித்ததை நீங்களே மறு பரிசீலனை செய்து வாக்காளர்களுக்கு விளக்கம் தாருங்கள். அப்படி இல்லாமல்  இந்த வழக்கில் வாதாடுவேன் என்றால் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த அந்த உத்தரவையே தள்ளுபடி செய்துவிடுவேன் என்று எச்சரித்தார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தடை உத்தரவை, மறுபரிசீலனை செய்து இரவுக்குள்ளே விளக்கம் அளித்துவிடுறோம் என்று தெரிவித்தார்.
மனுதாரர் ராஜாங்கம் தரப்பில் வழக்கறிஞர் சுமதி, அருண் ஆகியோர் ஆஜரானார்கள்.

;