india

img

பெண்ணுரிமை பற்றி எந்த உணர்ச்சியும் இல்லாத கட்சி பாஜக.... சர்வதேச பெண்கள் தின அணிவகுப்பில் சுபாஷினி அலி கண்டனம்.....

பாட்னா:
பெண்ணுரிமைக்காகவும், பெண் சமத்துவத்திற்காகவும் பல நூற்றாண்டு காலமாக ஓடி வருகிறோம்; ஆணாதிக்க சமூக கட்டமைப்பாக இருக்கிற, முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கனவாக மாறி நிற்கும் பெண் சமத்துவத்தை எட்டும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் சுபாஷினி அலி கூறினார்.

முற்றிலும் பெண்களுக்கு எதிரானமனுவாத சிந்தனையால் கட்டமைக்கப் பட்ட கட்சி பாஜக; பெண்ணுரிமை பற்றி எந்த உணர்ச்சியும் இல்லாத கட்சி அது; நாடு முழுவதும் பாஜக ஆட்சி நடக்கும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் கொடிய தாக்குதல்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன என்றும் அவர்சாடினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் (மார்ச் 8) திங்களன்று சர்வதேச பெண்கள் தின நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போராட்டங்கள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக, பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற மாதர் சங்க அணிவகுப்புக்கு சுபாஷினி அலி தலைமையேற்று உரையாற்றினார். பெண்கள் பாதுகாப்பு, ஜனநாயக மற்றும் அரசியல் பாதுகாப்பு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, சமவேலைக்கு சம ஊதியம், நகர்ப்புற ஏழைகளுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த அணிவகுப்பின் நிறைவாக பேசிய சுபாஷினி அலி “வேலை செய்யும் உரிமை என்பதேஇன்று பெண்களுக்கு பகல் கனவாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. பொதுத்துறை, அரசுத் துறை வேலைவாய்ப்புகள் முற்றாக முடக்கப்படும் நிலையில், முதலில் பறி போவது பெண் ஊழியர்களின்வேலைவாய்ப்புகளே! தொழிற்சாலைகள் திறப்பதற்கு பதிலாக மூடப்படு கின்றன. கொரோனா காலத்தில் மிகப் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அனுபவித்த பெண்கள், இப்போது வேலை பறிப்பிலும், உரிமைகள் பறிப்பிலும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

பீகாரில் பாஜக பங்கேற்றுள்ள ஆட்சி நடக்கிறது. பாட்னா நகரம் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாலியல்வன்கொடுமைகள் துவங்கி, பெண்களை உயிரோடு எரித்து படுகொலை செய்யும் பயங்கரங்களும் அரங்கேறி வருகின்றன என கண்டனமும், வேதனையும் தெரிவித்த சுபாஷினி அலி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என் றும், இத்தகைய  கயவர்களை காப்பாற்றுவதற்கு பாஜக தலைவர்கள் துணை நிற்கிறார்கள் என்றும் சாடினார்.பேரணியில் மாதர் சங்க பீகார் மாநிலச் செயலாளர் கீதா சாகர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தில்லி ஜந்தர் மந்தரிலும் மாதர் சங்க பேரணி நடைபெற்றது.

;