india

img

பிரபுல் கோடா படேலை திரும்பப் பெறுங்கள்.... லட்சத்தீவின் அமைதியைக் குலைத்து விடாதீர்கள்...  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 93 பேர் மோடிக்கு கடிதம்....

புதுதில்லி:
லட்சத்தீவு அமைதியை சீர் குலைக்கும் நிர்வாக அதிகாரி பிரபுல் ஹோடா படேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 93 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

‘அரசியலமைப்பு நடத்தை குழு’ என்ற பெயரில் கடிதத்தை எழுதியுள்ள 93 அதிகாரிகளும்,தாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என்றும், நடுநிலைமைமற்றும் இந்திய அரசியலமைப்பு மீதுமட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் தங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

வளர்ச்சி என்ற பெயரில் லட்சத் தீவில் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது,எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.நிர்வாக அதிகாரியின் முடிவுகள் தீவுகளில் உள்ளவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. அங்குள்ள சுற்றுச்சூழலையும் சமூகத்தையும் இது பாதிக்கிறது. இந்த வரைவு விதிமுறைகள் (LDAR) ஒவ்வொன்றும் தீவுகள் மற்றும் தீவுவாசிகளின் நெறிமுறைகளுக்கும் நலன்களுக்கும் எதிரான ஒரு பெரிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே என்பது தெளிவாகிறது.மேலும் இந்த முடிவுகள் லட்சத்தீவு மக்களுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளன.சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளி உலகத்திலிருந்து வரும் சுற்றுலா முதலீட்டாளர்களுக்கு ஒருரியல் எஸ்டேட் பகுதியாக மாற்றுவதற்காக, லட்சத்தீவு சமூகம், பொருளாதாரம், மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து, அவர்களின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீவில்உள்ளவர்களில் 96.5 சதவிகிதம் பேர்இஸ்லாமியர்கள். அவ்வாறு இருக்கையில், விலங்கு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இது லட்சத்தீவில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

எனவே, நிர்வாக அதிகாரியின் சர்ச்சைக்குரிய முடிவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் நிர்வாகியை லட்சத் தீவுக்கு நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

;