india

img

காலத்தை வென்றவர்கள் : சப்தர் ஹஷ்மி நினைவு நாள்...

சப்தர் ஹஷ்மி 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார்‌. அவரது தந்தையும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். சப்தர் ஹஷ்மி தில்லி தூய ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் படித்து பட்டம் பெற்று முதுகலைக் கல்வியைத் தில்லி பல்கலைக் கழகத்தில் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தில் முனைப்பாக ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் நாடகக் கலையின் மீது ஆர்வம் கொண்டார். கல்வியை முடித்ததும்  கட்சியில்சேர்ந்து முழு நேரம் கட்சிப் பிரச்சாரம் செய்தார்.சப்தர் ஹஷ்மி தில்லி, ஸ்ரீநகர், கார்வால் போன்ற ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணி செய்தார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்ய நாடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நெருக்கடி காலம் முடிந்ததும் அரசுப் பணியிலிருந்து விலகி வீதி நாடகங்கள் அரங்கேற்றுவதில் ஈடுபட்டார்.

அந்தக் காலத்தில் நிலவிய மக்கள் பிரச்சனைகளை நாடகங்கள் மூலம் எடுத்துக் காட்டிப் பேசிய சப்தர் ஹஷ்மி ஜன நாட்டிய மஞ்ச் என்னும் வீதி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். குறுகிய காலத்தில் 24 நாடகங்களை 4000 முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்தார்.1989 ஜனவரி முதல் நாளில் உத்தரப்பிரதேசம் சந்தாபூரில் ‘ஹல்லா போல்’(உரக்கப் பேசு)  என்ற பெயரில் வீதி நாடகத்தை நடத்தினார். அந்நாடகத்தை விரும்பாத குண்டர்கள் அங்கு நடித்துக் கொண்டு இருந்த கலைஞர்களைத் தாக்கினர். சப்தர் ஹஷ்மிக்குத் தலையில் பலத்த அடி விழுந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் இறந்து போனார். சப்தரின் படுகொலை இந்தியா முழுவதும் பெரிய அதிர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

சப்தர் ஹஷ்மியின் படுகொலையை நினைவு கூர்ந்து புகழ் பெற்ற ஓவியர் எம்.எப் உசேன் தம்முடைய ஓர் ஓவியத்தை சப்தருக்குக் காணிக்கை ஆக்கினார். சப்தர்  மறைந்த சில நாட்களிலேயே அவர் மனைவி மாலாஸ்ரீ அதே ஜனநாட்டிய மன்ச் நாடகக் குழுவின் மூலம் மீண்டும் ‘ஹல்லாபோல்’ எனும் வீதிநாடகத்தை சப்தர்ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் நடத்திக் காட்டினார். நாடு முழுவதும் சப்தர் ஹஷ்மி பெயரில் வீதிநாடகக் குழுக்கள் மற்றும் கலைக்குழுக்கள் பல ஏற்படுத்தப்பட்டு மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்றளவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

===பெரணமல்லூர் சேகரன்===

;