india

img

காலத்தை வென்றவர்கள் : சந்திரசேகர ஆசாத் நினைவு நாள்...

சந்திரசேகர ஆசாத் 1906ஆம்ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள் பிறந்தார்.இவரது 15ஆவது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட் டார். நடுவர் அவரிடம் அவரதுபெயர், தந்தைபெயர் மற்றும்அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறைஎன்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறைசெல்லுமாறு உத்தரவிடவே நான் அப்படிக் கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன் என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் ‘பாரத் மாதா கிஜெ’(இப்போது சங்கிகள் எழுப்பும் முழக்கமல்ல) எனக்கூறினார். அதுவரை சந்திரசேகரசீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப் பட்டவர் அதற்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

முழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடையவேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேஸ் சாட்டர்ஜி என்பவர் இந்துஸ்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிஸ்மில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிஸ்மில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பண பேதமில்லாத, அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துஸ்தான் குடியரசு அமைப்பின்கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது.அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கப் பொருட்களைஅவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிஸ்மிலின் சொந்த ஊரான ஷாஜகான்பூர் வட்டாரத்திலேயே கொள்ளை அடிக்க ஆரம்பித்தார்.அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.

இந்துஸ்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத்பிஸ்மில், யோகேஸ் சந்தர் சட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ஷி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப் பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்துபிரிட்டிஷ் அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரமானது. பிரசாத், அசஃபகுலாகான், தாகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப் பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி முராரி சர்மாபோன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துஸ்தான் குடியரசு அமைப்பை மீண்டும் உருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துஸ்தான் குடியரசு அமைப்பை இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர்.

அதன்படி சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள்அலகாபாத் ஆல்ஃப்ரட் பூங்காவில் தன்இயக்கத்தவரான சுகதேவுடன் பேசிக் கொண்டிருந்த போது பிரிட்டிஷ் காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். சுகதேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன்துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டுமிருக்ககாவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரிட்டிஷ்காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.

- பெரணமல்லூர் சேகரன்

;