india

img

காலத்தை வென்றவர்கள் : அயோத்தி தாச பண்டிதர் நினைவு நாள்....

சமூகப் புரட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்த அறிஞர் அயோத்தி தாசபண்டிதர் குறிப்பிடத்தக்கவர். மாமன்னன் அசோகருக்குப் பிறகு தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தலித் மக்களின் விடியலுக்காகவும் மூட
நம்பிக்கைகளை வேரறுக்கவும் அயராதுழைத்த வர் அயோத்திதாசர்.

தமது கருத்துக்களை ‘தமிழன்’ எனும் இதழ் மூலமும் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின் மூலமும் தமிழ் நாடு, கோலார், மைசூர், ஐதராபாத், ரங்கோன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரப்பி ஒரு மாபெரும் இயக்கமாக வளர்த்தவர். தீண்டாமையை அனுபவித்த மக்களின் வரலாற்றை ஆராய்ந்து அவர்கள் பூர்வத்தில் பௌத்தர்களாய் இருந்தவர்கள்தான் என்று அம்பேத்கருக்கு முன்பே எடுத்துரைத்தவர்.  புகழ்பெற்ற இயற்கை மருத்துவர்.
 தமிழ்த் தென்றல் திரு.வி.க.விற்கு இளமைக் காலத்தில்  ஏற்பட்டிருந்த முடக்குவாதத்தை நீக்கி அவரைக் குணப்படுத்தியவர்.

1907ஆம் ஆண்டு தொடங்கிய  ‘ஒரு பைசாத் தமிழன்’ அவரது மறைவு வரையில்  (05.05.1914) வாரந்தோறும் நிற்காமல்  வெளிவந்தது. அதுதான் 1908 முதல்   ‘தமிழன்’ என ஆனது. எப்பேற்பட்ட ஆளுமைகளாக இருந்த போதிலும் தமக்குத் தவறெனப் பட்டால் விமர்சிக்க அஞ்சாதவர். ‘ஈனப் பறையர்கள்’ என்று பாரதி குறிப்பிட்டு எழுதியதைக் கண்டித்து எழுதியவர். ‘பூர்வ தமிழ் ஒளியாம் புத்தரது ஆதிவேதம்’ என்று தலைப்பில் 1912ல் நூலாக வெளியிடப்பட்ட நீண்ட தத்துவம் சார்ந்த ஆய்வு ‘தமிழன்’ முதல் இதழிலிருந்தே வெளியாகத் துவங்கியது. ‘இந்திரர் தேசத்து சரித்திரம்’, ‘பௌத்த மதப் பண்டிகைகள்’, ‘எதார்த்த பிராமண வேதாந்த விவரம் ‘, ‘விபூதி ஆராய்ச்சி ‘, ‘அரிச்சந்திரன் பொய்கள்’ எனப் பல நூல்கள் தொடராக வெளியிடப்பட்டன. பௌத்த நெறியின் அடிப்படையில் திருக்குறளுக்கும் அவ்வையின் படைப்புகளுக்கும் விளக்கமளிக்கவும் செய்தார். தமிழனில் பண்டிதர் எழுதிய ‘தீண்டாமையின் வரலாறு’ முக்கியத்துவம் வாய்ந்தது.

மநுதர்ம சாஸ்திரத்தை அயோத்திதாசர் ‘மநு அதர்ம சாஸ்திரம்’ என்றே எழுதினார்.  இருபதாம் நூற்றாண்டில் சாதி எதிர்ப்புக்காக, சமத்துவத்திற்காக ஒழுங்கான நவீன வாழ்வுக்காக அவர் கட்டி எழுப்பிய பௌத்த தர்மத்தை  ஆதிவேதம் என்று அழைத்தார்.
உலகெலாம் பரவியிருந்த ஒடுக்கப்பட்ட தமிழர்களை ஒருங்கிணைப்பதாகவும், இட ஒதுக்கீடு, இந்து எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச் சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்னரே ‘தமிழன்’பேசியது. ‘தமிழன்’ இதழில் பெண்களுக்கான பத்தி ஒன்றும் தனியாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் இதழ் பணிகளைத் தீவிரமாகச் செய்து வந்ததோடு, இயக்கப் பணிகளையும் ஒருங்கிணைப்பாளராக மேற்கொண்டு அயராது உழைத்து வந்தார். இடையறாத பணியால் உடல் நலிவுற்றார்.

1914ஆம் ஆண்டு மேமாதம்  5ஆம் தேதி தன் முடிவு நெருங்குவதை அறிந்த பண்டிதர், தன் மகன் பட்டாபிராமனை அழைத்து ‘தமிழன் இதழைத் தொடர்ந்து நடத்த முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு பட்டாபிராமன் அவர்களும் ‘முடியும்’ என்று சொன்னபோது முகம் மலர்ந்து அனைவரையும் அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டு, தம் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பௌத்த துறவிகளைப் போல் உயிர் துறந்தார்.69 வயது வரை வாழ்ந்த அயோத்தி தாசபண்டிதர் பன்முகத் தன்மையைக் கொண்ட மாபெரும் அறிஞராய் பெரியாருக்கு முன்பாகவேபகுத்தறிவுச் சிந்தனைகளை விதைத்து வரலாறு படைத்தார் எனின் மிகையன்று.

===பெரணமல்லூர் சேகரன்===

;