india

img

காலத்தை வென்றவர்கள் : தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்....

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் நாள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே தில்லையாடி எனும் கிராமத்தில் பிறந்தார்.கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள்போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை. அதற்காக 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரிநீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை.  

தில்லையாடி வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் நாள் உடல் நலக் குறைவால் காலமானார். பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை “பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்குமுதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்” என காந்தி பாராட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.காந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் ‘தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்’ கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 01/05/2015 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

===பெரணமல்லூர் சேகரன்===

;