india

img

காலத்தை வென்றவர்கள் ; டி.டி.கோசாம்பி நினைவு நாள்....

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி 1907ல்குஜராத்தில் பிறந்தார். அவரது தந்தைஉலகப் புகழ்பெற்ற பௌத்த தத்துவமேதை. 1918ல் அவரது தந்தை ஹார்வர்டு பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றச் சென்றார். அதனால் கோசாம்பி மசாசுசெட்ஸின் கிரமர் பள்ளியில் பயின்றபின் 1920ல் கேம்பிரிட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே சாரணர் அமைப்பில் பங்குபெற்றார்.கேம்பிரிட்ஜில் மிகச்சிறப்பான வெற்றி பெற்று 1924ல் ஹார்வர்டு பல்கலையில் சேர்ந்தார். ஆனால் அவரது தந்தை சுதந்திரப் போரில் பங்கெடுக்க விரும்பி இந்தியா திரும்பியதால் கோசாம்பி படிப்பை விட்டுவிட்டு குஜராத்துக்கு வந்துசேந்தார். 1926ல் கோசாம்பி மீண்டும் அமெரிக்கா சென்று ஹார்வர்டு பல்கலை.யில் சேர்ந்தார். அங்கு கணிதவியலில் ஆய்வு செய்தார். 1929ல் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியா திரும்பினார்.பனாரஸ் இந்து பல்கலை.யில் கணிதமும் ஜெர்மன்மொழியும் கற்பிக்கும் ஆசிரியரானார். அத்துடன் கணித ஆய்வுகளையும் செய்துவந்தார். 

1931ல் கோசாம்பி நளினி என்ற பெண்ணைமணந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்குக் கணிதப்பேராசிரியராக அழைக்கப்பட்ட கோசாம்பிஅங்கே பணியாற்ற ஆரம்பித்தார். அங்கே பணியாற்றும்போது கணிதம் [Differential Geometry] மற்றும் பொறியியலில் [Path Spaces.] அவர் எட்டு ஆய்வேடுகளைத் தயாரித்தார்.1933ல் கோசாம்பி பூனாவில் உள்ள ஃபெர்கூசன்கல்லூரியில் தக்காண கல்விக் கழகத்தில் கணிதவியலாசிரியராகச் சேர்ந்தார். 1944ல் வரைபடங்களை ஆராய்ந்து புகழ்பெற்ற ஆய்வேடு [‘The Estimation of Map Distance from Recombination Values’] ஒன்றை வெளியிட்டார். இது கோசாம்பியின் வரைபடச் செயல்பாட்டுக் கொள்கை எனப்படுகிறது. அதேபோல புள்ளியியலிலும் முக்கியமான சில முன்னோடி முயற்சிகளைச் செய்தார். proper orthogonal decomposition (POD) என அழைக்கப்படும் அந்த ஆய்வு இன்றும் புகழ்பெற்றுள்ளது.

இக்காலகட்டத்தில் கோசாம்பி வரலாற்றாய்வுக்குள் புகுந்தார். சமஸ்கிருதத்தை கற்றுத்தேர்ந்தார். மூலநூல்களைத் தேடி ஆராய்ந்தார். சம்ஸ்கிருதச் செவ்வியல் கவிஞரான ஃபத்ருஹரி பற்றிய முக்கியமான ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1948ல் பிரசுரித்தார்.ஏறத்தாழ இக்காலகட்டத்தில் கோசாம்பி அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்றார். காங்கிரஸின் தீவிரச்செயல்பாட்டாளராக அவரது தந்தை இருந்தபோதிலும்கூட கோசாம்பி மார்க்ஸிய ஆய்வுமுறைகளிலும் மார்க்ஸிய அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார்.1945ல் ஹோமி பாபா, கோசாம்பியை டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்திற்கு அழைத்தார். அங்கே சென்ற கோசாம்பி கணிதத்தில் ஆய்வுசெய்தார். அன்று உருவாகி வந்துகொண்டிருந்த கணிப்பொறியியலை ஆய்வு செய்வதற்காக 1948 முதல் இரு வருடங்கள் கோசாம்பி யுனெஸ்கோ உதவியுடன் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார். அப்போது சிக்காகோ பல்கலை.யில் கணிதப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பிரின்ஸ்டன் பல்கலை.யின் உயராய்வுக் குழுமத்திலும் பணியாற்றினார்.லண்டனில் அவருக்கு இந்தியவியலாளர் ஏ.எல்.பாஷ்யம் அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்தது. அது அவரை மீண்டும் வரலாற்றாய்வுகளில் ஆர்வம் கொள்ளச் செய்தது .
இந்தியா திரும்பிய கோசாம்பி இந்திய அரசியலிலும் ஈடுபட்டார். உலக அமைதி இயக்கத்தில் சேர்ந்து உலக அமைதிக்காகப் போராடினார். இந்தியாவில் அணுசக்திமயமாதலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. கோசாம்பிஅணுசக்திக்கு மாற்றாக, மாற்று எரிபொருட்களை உருவாக்கவேண்டுமென கருத்துக்கொண்டிருந்தார்.இக்காலகட்டத்தில் இந்தியாவின் தொன்மையானவரலாற்றை ஆராய்ந்த கோசாம்பி அவரது புகழ்பெற்ற முதல் வரலாற்று நூலை 1956ல் வெளியிட்டார். ‘இந்திய வரலாற்றாய்வுக்கு முன்னுரை’ பல முக்கியமான வினாக்களை எழுப்பிய இந்த நூல் பெரிதும் பேசப்பட்டது.

1952 முதல் 1962 வரை சீனாவில் இருந்த கோசாம்பி சீனப்புரட்சியை நேரில் கண்டார். அது அவருக்குள் நவீன உற்பத்திமுறை மற்றும் நுகர்வோர் பண்பாடு மேல் ஆழமான ஐயத்தை உருவாக்கியது. நேரு பாணி பெருந்தொழிலாக்கம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மேல் நம்பிக்கை இழந்த கோசாம்பி டாட்டா அறிவியல் ஆய்வுக்கழகத்தில் இருந்து விலகினார்.அதன்பின் கோசாம்பியின் ஆய்வு முழுக்க முழுக்க இந்திய வரலாற்றில் குவிந்தது. அவரது பெரும்படைப்பு என்று கருதப்படும் ‘பண்டைய இந்தியாவின் பண்பாடும் நாகரீகமும்’ என்ற நூல் 1965ல் வெளிவந்தது. 

கோசாம்பி இந்திய அறிவியல் தொழில் துறைக்கழகத்தின் முதுநிலை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில்தான் அவரது முக்கியமானவரலாற்று ஆய்வேடுகள் வெளிவந்தன. இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கான கதைகளையும் நிறைய எழுதினார். அவர் எழுதியவற்றில் கணிசமானவை அவர் காலகட்டத்தில் பிரசுரமாகவில்லை.கோசாம்பி ஜூன் 29, 1966ல் காலமானார். அவரது மரணத்துக்கு பின் அவருக்கு இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் உயரிய’ விருது அளிக்கப்பட்டது.

கோசாம்பியின் வரலாற்றாய்வுமுறை இந்திய வரலாற்றாய்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு மன்னனின் பெயரைவிட எந்த வகையான கலப்பை பயன்படுத்தப்பட்டது என்பதே வரலாற்றை ஆராய்வதற்கு முக்கியமானது என அவர் கூறினார். உற்பத்திமுறை, வினியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகப் பரிணாமத்தை உருவகித்து அதைக்கொண்டு வரலாற்றை உருவாக்க முற்பட்டார். மதக்குறியீடுகள். சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை சமூக வளர்ச்சியின் சித்திரத்தை காட்டும் அடையாளங்கள் என்று அவர் விளக்கினார். ‘தொன்மமும் உண்மையும்’ என்ற அவரது நூலில் இந்திய தெய்வங்களை இந்தியாவின் சமூக வளர்ச்சி பற்றி ஆராய்வதற்கான குறியீடுகளாக அவர் பயன்படுத்துவதைக் காணலாம்.கோசாம்பியின் ஆய்வுமுறையை பின்பற்றிய ஆய்வாளர்கள் என ஆர்.எஸ்.சர்மா, இர்பான் ஹபீப், ரொமிலா தாப்பர் போன்றவர்களைச் சொல்லலாம். இன்றும் அவரது ஆய்வுமுறை வெற்றிகரமாகக் கையாளப்படுகிறது.

பெரணமல்லூர் சேகரன்

;