india

img

நம்பகத்தன்மையை இழக்கும் இந்திய தேர்தல் ஆணையம்... கேரள மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில் அம்பலப்பட்டது....

புதுதில்லி:
கேரளத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்த மத்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) செயல், அந்த அமைப்பு மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான மற்றுமொரு சான்றாக மாறியிருப்பதாக கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசமைப்பு ரீதியாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் அரசியல் கருவியாக செயல்படுகிறது என்பதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் இருப்பதையும் அது பட்டியலிட்டுள்ளது.இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்சட்டமன்றங்களுக்கு 2017-இல் ஒரேநேரத்தில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இமாச்சலில் மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. குஜராத்திற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது. குஜராத்தில் புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட தொடக்க விழா ஆடம்பரத்தை முடிக்க பிரதமருக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மாற்றகொண்டாட்டங்களை நடத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.2019 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் நடத்திய ஆத்திரமூட்டும் மற்றும்வகுப்புவாத பிரிவினைக் கருத்துகளைக் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. வாக்குப்பதிவு நாளில்மோடி நடத்திய அணிவகுப்பு (ரோடு ஷோ)நிகழ்ச்சிக்கும் தேர்தல் ஆணையம் நற்சான்று கொடுத்தது.பிரதமர் மீதான புகார்களை தள்ளுபடி செய்வது குறித்து தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பகிரங்கமாகவே ஆட்சேபணை தெரிவித்தார். 

இதற்காக பின்னாளில், லவாசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வருமான வரித்துறை சோதனையை எதிர்கொண்டனர். தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு, லவாசா  நாட்டை விட்டே வெளியேற்றுவதுபோல் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு மாற்றப்பட்டார். ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.தேர்தல்களை நாசப்படுத்தும் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க ஆணையம் தயாராக இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பத் தொடங்கிய ‘நமோ டிவி’யின் அத்துமீறலையும் கண்டுகொள்ளவில்லை. சமூக ஊடகங்கள் மூலம் வகுப்புவாத பிரச்சாரங்களை நிறுத்த ஆணையம் தலையிடவில்லை.

தற்போது மேற்கு வங்க தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்மூலம் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வகுப்புவாத பிளவுகளை உருவாக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, ஏப்ரல் 12-ஆம்தேதியே நடைபெற வேண்டிய மாநிலங்களவைத் தேர்தலை திடீரென ரத்து செய்து, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொண்டது. பின்னர், நீதிமன்றத்தின் முன்பு தனது முடிவை நியாயப்படுத்த முடியாத நிலையில்-அம்பலப்பட்டு ஏப்ரல்30 அன்று தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.

;