india

img

ஏன் இப்படி முதுகெலும்பு இல்லாமல் போனீர்கள்...? சச்சின், கோலி, அக்ஷய், லதா மங்கேஷ்கரை விளாசித் தள்ளும் சக பிரபலங்கள்....

புதுதில்லி:
இந்திய விவசாயத் துறையையும், விவசாயிகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, தில்லியில் கடும் குளிரிலும், மழையிலும் கடந்த 72 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். இரக்கமில்லாத மோடி அரசு, விவசாயிகளுக்கான கழிப்பறை வசதி, தண்ணீர், மின்சாரம், உணவு ஆகியவற்றைக் கூட கிடைக்கவிடாமல் தடுத்து, ஒடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

ஆனால், இது எதுபற்றியும் வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதித்து வந்த இந்திய பாலிவுட் திரைக்கலைஞர்களும், கிரிக்கெட் வீரர்களும்- விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கிரேட்டா தன்பெர்க், ரிஹானா, மியா கலீபா உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக கொதித்து எழுந்து விட்டனர். எங்கள் நாட்டு விவசாயிகளை நாங்கள் அடிப்போம், கொல்வோம். அதைப்பற்றி கேட்க நீங்கள் யார்? என்ற ரீதியில் இது உள்நாட்டு விவகாரம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. வெளிநாட்டவர் கருத்து சொல்ல வேண்டாம்.. என்று இந்திய கிரிக்கெட் பிரபலமான சச்சின் டெண்டுல்கர் துவங்கி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஓஜா, ஹர்த்திக் பாண்டியா, கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் ஒரே குரலில் கத்தி ஊரைக் கூட்டினர். பாலிவுட் திரைக்கலைஞர்களான நடிகர் அக்ஷ்ய் குமார், அஜய் தேவ்கான், கரண் ஜோகர், நடிகை கங்கனா ரணாவத், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரும் இந்த ஜோதியில் ஐக்கியமாகினர்.

நான் தினமும் மாட்டின் சிறுநீரைக் குடிக்கிறேன் என்று டிஸ்கவரி சேனலில் பேட்டியளித்த நடிகர் அக்‌ஷய் குமார், “விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தெளிவாக உள்ளன. வேறுபாடுகளை உருவாக்குவோரை கவனத்தில் கொள்ள வேண்டாம்” என்று கூறினார்.“இந்தியாவிற்கோ அல்லது இந்தியக் கொள்கைகளுக்கோ எதிரான எந்தவொரு தவறான பிரச்சாரத்திற்கும் யாரும் இரையாகிவிட வேண்டாம்” என்று அஜய் தேவ்கானும், “நாம் கொந்தளிப்பான காலங்களில் வாழ்கிறோம். ஒவ்வொரு திருப்பத்திலும் விவேகமும் பொறுமையும் தேவை” என்று கரண் ஜோஹரும் கூற, எப்போதும் அமைதியான தோற்றமளிக்கும் லதா மங்கேஷ்கரும், “ஒரு பெருமைமிகு இந்தியனாக, நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என நம்பிக்கைஉள்ளது” என்று உபதேசத்தில் ஈடுபட்டார்.

இது, இந்திய மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், இவர்களுக்குஎதிராக சக விளையாட்டு மற்றும் திரைப்பிரபலங்களே பலர் தற்போது கண்டனம் தெரிவிக்க துவங்கியுள்ளனர்.விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்தியப் பிரபலங்களை, ‘முதுகெலும்பு இல்லாத பிரபலங்கள்’ (‘Spineless Celebs’) என்று ‘மேட் இன் ஹெவன்’திரைப்பட நடிகர் அர்ஜுன் மாத்தூர் கடுமையாக சாடியுள்ளார்.“எங்கள் முழுமையான முதுகெலும்பு இல்லாதனத்தை காட்டுகிறோம், பாருங்கள். எங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக, எங்களை கடவுளாகக் கருதிய வெகுஜனங்களுக்கு எதிராக,இந்த ராணுவ பாணியிலான அணிதிரட்டலுக் காக நாங்கள் ஒன்றிணைந்து நிற்போம். எந்த விவேகமான அல்லது மனிதாபிமானக் குரலும் இதில் தலையிடக் கூடாது... அப்படித்தானே” என்று மாத்தூர் விளாசியுள்ளார்.

“திரையுலகில் இருந்து அரசுக்கு வழங்கிய ஆதரவால் மனம் உடைந்து போனேன்” என்று நடிகரும் மற்றும் டிவி தொகுப்பாளருமான சுஷாந்த் சிங் கூறியுள்ளார்: “படங்களில் ஹீரோக்கள் அல்லது கதாநாயகிகளாக இருப்பவர்களை ஏன் உங்கள் கடவுளாக நினைக்கிறீர்கள்? இப்போது மனதுஉடைந்து விட்டதா..?” என்றும் பொதுமக்க ளின் எண்ண ஓட்டத்தையும் அவர் நாடி பிடித்துள்ளார்.“விவசாயிகள் பிரச்சனையைப் பற்றி பேசுபவர்கள் ஏலியன்கள் கிடையாது. சக மனிதர்கள்தான். பிற மனிதர்களின் உரிமைகள் பற்றி சக மனிதர்கள் பேசுகிறார்கள்” என்று சோனாக்ஷி சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார். “இந்திய பிரபலங்கள் அனைவரும் ஒரேநேரத்தில், ஒரே மாதிரியான வார்த்தைகளை டுவீட் செய்திருப்பதைப் பார்த்தால், இங்கே பொம்மலாட்டம் நடக்கிறது” என்று பாலிவுட் இயக்குநர் ஓனிர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.“பிரபலங்கள் அனைவருமே ஒரே மாதிரி மெசேஜ்களை டுவிட் செய்துள்ளனர். ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாறியுள்ளது. அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை செய்துள்ளார்கள். இதைப் பார்த்தால், மேலே இருந்து ஒருவர் இயக்க.. கீழே இருக்கும் பொம்மைகள் அவரது இயக்கத்துக்கு ஏற்ப ஆடக்கூடிய பொம்மலாட்ட நிகழ்ச்சி போல இருக்கிறது” என்று ஓனிர் குறிப்பிட்டுள்ளார்.“ரிஹானா மற்றும் கிரெட்டா தன்பெர்க் ஆகியோரின் ட்விட்டர் பதிவு இந்தியர்களை ‘ஒருங்கிணைத்தது’ எப்படி? என ஆச்சரியமாக இருக்கிறது” என்று காமெடி நடிகர் வீர் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ரிஹானா அல்லது கிரெட்டா தன்பெர்க் ஆகியோருக்கு இந்திய விவசாயிகள் பற்றி மேலோட்டமாக மட்டும்தான் தெரியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதே நேரம் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு காரணமாக ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பிரபலங்கள் ட்விட்டரில் பதிவு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் அரசின் கரங்களில் எப்படிபாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது” என்றும் வீர் தாஸ் பதிவிட்டுள்ளார்.“ஒரே மாதிரியாக இப்படி பிரபலங்கள் டுவிட் பதிவு செய்வது ஏதோ மார்க்கெட்டிங் செய்வது போல இருக்கிறது” என்று பாலிவுட் நகை டிசைனர் பாரா அலி கான் விமர்சித்துள்ளார்.“என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. ஆனால் உங்களது கருத்து, அசல் கருத்தாக இருக்கவேண்டும். இப்போது உங்களை நீங்களே தாரை வார்த்து விட்டீர்கள். உண்மையான ஹீரோக்கள் மற்றும் சினிமா ஹீரோக்கள் இடையேதான் இப்போது போட்டி உருவாகியுள்ளது. இதுதான் இந்திய நிலவரம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை சயானி குப்தா மிகவும் காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார்.

“அய்யோ! பக்தர்கள் விழித்துவிட்டார்கள்!. சோம்பி திரைப்படங்களின் கிளைமாக்ஸில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். யாராவது மனிதர்கள் இருக்கிறார்களா என்று சோம்பி பார்க்கும். ஒருவர் அந்தப் பக்கமாக நடந்து செல்வது தெரிந்தாலும் அவ்வளவுதான். கதை முடிந்தது. அதைப் போன்ற உணர்வை தான், நான் இப்போது பெற்றேன்” என்று சயானி குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே நடிகர் சித்தார்த், டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “உங்கள் ஹீரோக்களை கவனமாக, அறிவுப்பூர்வமாக தேர்ந்தெடுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்துகொள்ளும் தன்மையும்தான் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இவ்வளவு காலத்தில், எந்தவொரு பிரச்சனையிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்றால், இதுதான் இவர்களின் பிரச்சாரம்” என்றும் விமர்சித்துள்ளார்.

;