india

img

பெட்ரோல் விலை உயர்ந்து விட்டதா..? அப்படி ஒன்றும் தெரியவில்லை... ஹரியானா பாஜக முதல்வர் கட்டார் சொல்கிறார்...

சண்டிகர்:
“சாதாரண மக்கள் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். சிலர் மட்டுமே சொந்த வாகனத்தில் பயணிக்கின்றனர். எனவே பெட்ரோல் விலை உயர்வால் சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை. அதுமட்டுமல்ல மக்களே விலை உயர்வுக்கு பழகி விட்டனர்” என்று பீகார் மாநில பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத் பேசியிருந்தார்.

இதேபோல, “பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது சரிதான், இவ்வாறு செய்தால் மட்டும்தான் மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி மக்கள் செல்வார்கள்” என்று ம.பி. மாநில பாஜக அமைச்சர் விஷ்வாஸ் சரங் கூறியிருந்தார். “பெட்ரோலை மக்கள் வாங்காவிட்டால், தானாகவே விலை குறைந்து விடும்” என்றும் தெரிவித்திருந்தார்.பிரதமர் மோடியோ, “பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமே முந்தைய அரசுகள்தான்” என்று பழியைத் தூக்கி காங்கிரஸ் மீது போட்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 148 டாலர் என்று அதிகரித்தும், 70 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டவில்லை என்பதை மறந்துவிட்டு இவ்வாறு பேசியிருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, எங்கள் கையில் எதுவும் இல்லை- மாநில அரசுகள் பார்த்து வரியை குறைத்தால் உண்டு என்று கைகழுவினார்.

இது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், நாட்டில், பெட்ரோல் அப்படியொன்றும் அதிகமான விலைக்கு விற்கப்படவில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.‘‘கடந்த 4-5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரைதான் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது அதிகமே கிடையாது” என்று கூறியிருக்கும் கட்டார், “அரசு வசூலிக்கும் எந்த வரியானாலும், அது கடைசியில் மக்களுக்குத்தானே பயன்படுத்தப்படுகிறது” என்றும் வியாக்யானம் அளித்துள்ளார். இவை அனைத்தும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்களின் இந்தப் பேச்சு, ஏழை-எளிய, நடுத்தர மக்களின் துயரத்தை கேலி செய்வது போல உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

;