india

img

பசியின் மீது வியாபாரம் செய்வதை அனுமதிக்க மாட்டோம்... விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத் அதிரடி..... மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு....

புதுதில்லி:
நாட்டு மக்களின் பசியின் மீது பெருநிறுவனங்கள் வியாபாரம் செய்வதை விவசாயிகளாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பாரதிய கிஷான் யூனியனின் தலைவரும், தில்லியில் போராடும் விவசாயிகள் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத வரை, மோடி அரசை நாங்கள் விடப்போவதில்லை என்றும் திகாயத் எச்சரித்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராகேஷ் திகாயத் மேலும் பேசியிருப்பதாவது:

“அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்காத வரை, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை- மத்திய அரசை நிம்மதியாக இருக்க விடமாட்டோம். நாடு முழுவதும் சென்று இச்சட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி, எங்கள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறுவோம்.ஏனெனில், இந்த விவசாய சட்டகள் நாடு முழுவதும் உள்ள பொது விநியோக முறையை முற்றிலுமாக அழித்துவிடக் கூடியவை. இந்தச் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிக்காது. விவசாயத் துறையைச் சார்ந்துள்ள சிறு வணிகர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட மற்ற பிரிவினரும் இந்தச் சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

நம் நாட்டில் குடோன்கள்தான் முதலில் கட்டப்பட்டன. அதன் பின்னரே, 3 வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்பதை தெரிந்துதான் விவசாயிகளாகிய நாங்கள் போராடுகிறோம். நம் நாட்டில் பொதுமக்களின் பசியின் மீது யாரும் வணிகம் செய்யக்கூடாது. அதை விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தில்லி போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது.”
இவ்வாறு ராகேஷ் திகாயத் பேசியுள்ளார்.

                                                    *****************

விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு.... அரசு விரைந்து தீர்வுகாண வலியுறுத்தல்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையான காஜிபூர், சிங்கு, திக்ரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 80 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது இப்போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாராகாந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.84 வயதான அவர் தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காஜிபூருக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகள் மத்தியில் அவர் பேசுகையில், “அரசியல் காரணத்துக்காக நான் இங்கு வரவில்லை. வாழ்நாள் முழுவதும் உணவளித்த விவசாயிகளுக்காக வந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

“விவசாயிகளின் கடின உழைப்புப் பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை.விவசாயிகளின் நலனே நாட்டின் நலம். விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும்; என்ன நடந்தாலும் விவசாயிகள் பயனடைய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தாரா காந்தி, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;