india

img

40 லட்சம் டிராக்டர்களுடன் தில்லி நோக்கி செல்வோம்..... கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அழைப்பு......

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராடும் விவசாயிகள் அடுத்தகட்டப் போராட்டமாக 40லட்சம் டிராக்டர்களுடன் தில்லி நோக்கி செல்ல முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து பாரதிய  கிசான்யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், ஒட்டுமொத்த தேசத்தின் பிரச்சனையாக வேளாண் சட்டங்கள் இருப்பதால், நாடு முழுவதும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள் நடத்துவது அவசியம் என்று தெரிவித்தார்.“உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகளிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்.  உங்கள் வயல்களில் நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்;  இருந்தாலும் தில்லிக்கு எப்போது வேண்டுமானாலும் புறப்படுவதற்குத் தயாராக எரிபொருள் நிரப்பி  உங்கள் டிராக்டர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.” என்று பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டம் லக்நாரில் நடைபெற்ற விவசாயிகளின் மகாபஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளின் போராட்டம் தில்லி எல்லைகளில் 100வது நாளை நோக்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தின்  கரும்பு விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மகாபஞ்சாயத்தில், திகாயத் பேசுகையில், “விவசாயிகளிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் முற்றிலும் தவறான சட்டங்களை இயற்றியுள்ளது. முற்றிலும் தவறான சட்டங்களைத் திரும்பப் பெறுவது தானே சரி. தானியங்களை லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டு, நாட்டில் பசியை வைத்து அரசு வர்த்தகம் செய்யப் பார்க்கிறது” என்று அவர் சாடி னார்.

நாடு முழுவதும் பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 22 வரை ஏராளமான மகாபஞ்சாயத்துகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.  மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. கார்ப்பரேட்கள்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அப்படி இல்லாமல் இருந்திருந் தால், இந்நேரம் இந்தப் பிரச்சனை தீர்வை எட்டியிருக்கும். இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவோ, குறைந்தபட்ச ஆதரவு விலையை விளைபொருட்களுக்கு உறுதிசெய்யும் சட்டத்தைக் கொண்டு வரவோ இந்த அரசுக்கு எண்ணம் இல்லை என்பதே உண்மை” அரசு இந்த சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், கோதுமை அறுவடைக்குப் பிறகு,இம்முறை 4 லட்சம் டிராக்டர்களு டன் அல்ல, 40 லட்சம் டிராக்டர்களு டன் நாங்கள் தில்லி நோக்கி பேரணியை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.உத்தரப்பிரதேசத்தில் நடத்தப் படும் மகாபஞ்சாயத்துகள் விவசாயிகளை அணிதிரட்டி, விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தை வலுசேர்ப்பதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. 

;