india

img

உருமாற்ற கொரோனா பற்றி மார்ச் மாதமே எச்சரித்தோம்..... மோடி அரசு மீது மூலக்கூறு உயிரியல் மைய இயக்குநர் டாக்டர் ராகேஷ் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து, 2 மாதங்களுக்கு முன்பாக மார்ச் மாதமே மத்திய அரசை எச்சரிக்கை செய்ததாக மத்திய மூலக்கூறு உயிரியல் மைய இயக்குநர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

‘தி வயர்’ இணைய ஊடகத்திற்காக, பிரபல செய்தியாளர் கரண் தாப்பர் நடத்திய நேர்காணலில், டாக்டர் ராகேஷ் மிஸ்ரா இந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.“நாங்கள் (Indian SARS-CoV-2 Genomic Consortia - INSACOG) கொரோனா தொற்றுப் பரவல் குறித்து முன்னரே குரல் எழுப்பினோம். தேசிய நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சுஜீத் குமார் சிங்-கிற்கு, கொரோனா இரண்டாவது அலை குறித்த கவலை சுட்டிக்காட்டப்பட்டது. 

நாம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. எங்களின் இந்த எச்சரிக்கை நிச்சயமாக பிரதமர் மோடியிடமும் தெரிவிக்கப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கொரோனா விஷயத்தில் ‘அவசர நடவடிக்கை தேவை’ என்று என்சிடிசி-யின் இயக்குநர் சுஜீத் குமார் சிங்-கும், அரசாங்கத்தை தெளிவாக எச்சரித்தார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாம் பார்க்கப் போகும் இறப்பைத் தடுக்க மிகவும் தாமதமாகி விடும் என்று மிக உறுதியாகக் கூறியதை, டாக்டர் சுஜீத் குமார் சிங் அரசுக்கு எடுத்துரைத்தார். இதில் சந்தேகமே இல்லை.

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) இதனை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை அப்போதே வெளியிட்டது. அதிகப்படியான தொற்றுப் பரவல் வைரஸ் உருமாற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்ற எங்களின் அந்த எச்சரிக்கையையும், ராய்ட்டர்ஸ் (Reuters) பதிவு செய்தது. ஆனால், இந்திய ஊடகங்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் மார்ச் மாதத்திலேயே மத்திய அரசை எச்சரித்தோம். ஆனால், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதிக ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்வது பற்றி மட்டுமே அரசு பேசிக் கொண்டிருந்தது.

ஒரு திருமணத்தில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கியதே கூட தவறு. 5 பேர் என்று குறைத்திருக்க வேண்டும். ஏனெனில் தொற்று அபாயம் அந்தளவிற்கு பெரியது.கும்பமேளா போன்ற விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டு இருக்க வேண்டும். மாறாக, கும்ப மேளாவில் லட்சக்கணக்கானோர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பாஜக-வைச் சேர்ந்த அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா போன்றவர்களே மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தனர்.ஒருபடி மேலே சென்று, கடவுள் பக்தியும், கங்கைத் தாயின் சக்தியும் எங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்று உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர் பகிரங்கமாக பேசினார். பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார். இவைகள் அனைத்துமே மிகத் துரதிர்ஷ்டவசமானது.இவ்வாறு டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

;