india

img

முதுபெரும் தோழர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மறைவு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி....

புதுதில்லி:
முதுபெரும் தோழர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மரணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

முதுபெரும் தோழரும் மத்தியக்குழு முன்னாள் உறுப்பினருமான தோழர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி, பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், அங்கு திங்கள் இரவு காலமானார்.  அவருக்கு வயது 96.கணேஷ் தா என்று பிரியத்துடன் அழைக்கப்படும் தோழர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி, தன்னுடைய 17ஆவது வயதில் மாணவராக இருந்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிலிருந்து சுமார் எண்பது ஆண்டுகாலம் பொதுவாழ்வில் மிகவும் அர்த்தமுள்ள விதத்தில் வாழ்ந்தார்.தோழர் கணேஷ் தா, 1942இல் ஒன்றாய் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்து, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பீகார் மாநில செயலாளராகவும் பல ஆண்டு காலம் மத்தியக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

தோழர் கணேஷ் தா, ஒரு நிலவுடைமையாளர் வர்க்கத்திலிருந்து வந்தபோதிலும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறுகுறு விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடினார். இப்போராட்டங்களின் காரணமாக அவர், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் சுமார் ஆறாண்டு காலம் சிறையிலிருந்தார்.தோழர் கணேஷ் தா, இரு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் (எம்எல்ஏ), ஒரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் (எம்எல்சி) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்துத்தரப்பினரும் மிகவும் பிரியத்துடன் நெருங்கக்கூடிய தோழராகவும், பீகாரில் அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களாலும் மிகவும் மதிக்கக்கூடிய தலைவராகவும் விளங்கினார்.

தோழர் கணேஷ் தா, மிகவும் எளிய வாழ்க்கைவாழ்ந்தார். அவருடைய சுய தேவைகள் என்பவை அரிதிலும் அரிதாகும். இந்தத்தருணத்தில் அவருடைய இறப்பு பீகாரில் இடதுசாரி இயக்கத்திற்கு மாபெரும் இழப்பாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, தன் ஆழ்ந்த அஞ்சலியை அவருடைய குழந்தைகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய இழப்புக்காக துக்கம் அனுசரித்திடும் பீகார் மாநிலக் கட்சியுடனும் அதன் ஒட்டுமொத்த உறுப்பினர்களுடனும் அரசியல் தலைமைக்குழுவும் தன்னை இணைத்துக்கொள்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.   (ந.நி.)

;